சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான டேவன் கான்வே 52 பந்துகளில், 16 பவுண்டரிகள், ஒருசிக்ஸருடன் 92 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஷிவம் துபே 17 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 28 ரன்கள் விளாசிய நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்தை லாங் ஆன் திசையில் தூக்கி அடித்து ஷாருக்கானிடம் பிடிகொடுத்து வெளியேறினார். மொயின் அலி 10, ரவீந்திர ஜடேஜா 12 ரன்களில் நடையை கட்டினர். இறுதி ஓவரில் களமிறங்கிய கேப்டன் தோனி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். 4 பந்துகளை சந்தித்த அவர், 13 ரன்கள் சேர்த்தார்.
201 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பஞ்சாப் அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷிகர் தவண் 15 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களில் எடுத்து துஷார் தேஷ்பாண்டே பந்தில் ஆட்டமிழந்தார். அதர்வா தைட 13 ரன்களும், பிரப்ஷிம்ரன் சிங் 24 பந்துகளில், 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்களும் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தனர். லியாம் லிவிங்ஸ்டன், சேம் கரண் களத்தில் இருந்த நிலையில் கடைசி 5 ஓவர்களுக்கு 72 ரன்கள் தேவையாக இருந்தன.
துஷார் தேஷ்பாண்டே வீசிய 16வது ஓவரில் லிவிங்ஸ்டன் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். மேலும் லெக் பைஸ் வழியாக ஒரு பவுண்டரியும் சென்றது. இந்த ஓவரின் 5வது பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்று ருதுராஜ் கெய்க்வாட்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார் லிவிங்ஸ்டன். 24 பந்துகளை சந்தித்த அவர், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 40 ரன்கள் சேர்த்தார். துஷார் தேஷ்பாண்டே வீசிய இந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள் விளாசப்பட்டன.
ஜடேஜா வீசிய அடுத்த ஓவரில் கரண், ஜிதேஷ் சர்மா ஆகியோர் தலா ஒரு சிக்ஸரை விளாச 17 ரன்கள் கிடைத்தன. இதனால் தேவையான ரன் விகிதம் வெகுவாக குறைந்தது. 3 ஓவர்களில் 31 ரன்கள் தேவை என்ற நிலையில் பதிரனா வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் சேம் கரண் போல்டானார். சேம் கரண் 20 பந்துகளில், 29 ரன்கள் சேர்த்தார். இந்த ஓவரில் ஜிதேஷ் சர்மா பவுண்டரி ஒன்றை விட்ட 9 ரன்கள் சேர்க்கப்பட்டன. 12 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் துஷார் தேஷ்பாண்டே வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜிதேஷ் சர்மா 4வது பந்தில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். அவர், 10 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய சிகந்தர் ராஸா பவுண்டரி ஒன்றை அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது.
கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் பதிரனா வீசினார். முதல் இரு பந்துகளில் இரு ரன்கள் எடுக்கப்பட்ட பந்தில் 3-வது பந்தில் ரன் சேர்க்கப்படவில்லை. அடுத்த இரு பந்துகளிலும் தலா 2 ரன்கள் எடுக்கப்பட்டன. கடைசி பந்தில் 3 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ஆட்டத்தில் பரபரப்பு மேலும் அதிகமானது. இந்த பந்தை சிகந்தர் ராஸா பேக்வேர்டு ஸ்கொயர் லெக் திசையில் தட்டிவிட்டு 3 ரன்களை ஓடியே எடுக்க பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிகந்தர் ராஸா 13, ஷாருக்கான் 2 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிஎஸ்கே தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3, ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்களை கைப்பற்றினர். பஞ்சாப் அணிக்கு இது 5வது வெற்றியாக அமைந்தது. 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 4வது தோல்வியை சந்தித்தது. 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் சம அளவிலான புள்ளிகளை பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக டேவன் கான்வே தேர்வானார்.
சிறப்பாக பந்துவீசவில்லை: தோனி
தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியதாவது: இந்த போட்டியில் 200 ரன்கள் எடுத்தபோது சவாலான ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தோம். பவுலிங்கின்போது நாங்கள் 2 மோசமான ஓவர்களை வீசிவிட்டோம்.
போட்டியின்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நாங்கள் பேட்டிங் செய்யும் போது கடைசி சில ஓவர்களில் 10 முதல் 15 ரன்கள் வரை கூடுதலாக எடுத்திருக்கலாம். எங்கள் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசவில்லை என்று நினைக்கிறேன். எங்களது பவுலிங்கில் என்ன பிரச்சினை என்று பார்க்கவேண்டும். பதிரனா சிறப்பாக பந்துவீசினார். முதல் 6 ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பந்துவீசி இருக்கவேண்டும். ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago