Ashes 2023 | எங்களின் இப்போதைய ஆட்டத்திற்கு முன்னால் நிற்பீர்களா?- ஆஸ்திரேலியாவை சீண்டும் ஸ்டூவர்ட் பிராட்

By ஆர்.முத்துக்குமார்

கடந்த ஆஷஸ் தொடரில் 4-0 என்று ஆஸ்திரேலியாவில் செம உதை வாங்கிய இங்கிலாந்து அணி இப்போது புதிய கோச் மெக்கல்லம், புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங்கையே புரட்டிப் போட்டு எல்லா அணிகளையும் புரட்டி எடுத்து வருகின்றது. இதனையடுத்து தற்போதைய ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடக்கவிருப்பதால் ஸ்டூவர்ட் பிராட் ஆஸ்திரேலியா அணியை ‘என் கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா.. வம்புக்கு இழுக்காதே நான் சூராதி சூரனடா’ என்ற ரேஞ்சில் பேசி சீண்டியுள்ளார்.

கடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா சொல்லி சொல்லி ஜெயித்ததை ஸ்டூவர்ட் பிராட், அந்த வெற்றியெல்லாம் கோவிட் காய்ச்சல் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளினால் யாரும் பார்மில் இல்லை. நல்ல மனநிலையில் இல்லை. ஆகவே அது ‘ஒன்றுமில்லாத ஒரு டெஸ்ட் தொடர்’ என்று வர்ணித்துள்ளார்.

ஆனால், ஆஸ்திரேலிய ஊடகங்களோ, பிராட் கோவிட், கீவிட் என்று கதையடிக்கின்றார். 4-0 என்று முற்று முழு உதை வாங்கியது உண்மைதானே என்று கலாய்க்கின்றனர். இந்நிலையில் ஜூன் 16ம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஆஷஸ் முதல் டெஸ்ட் நடைபெறுகிறது. இந்த ஆஷஸ் 2023 டெஸ்ட் தொடர் குறித்து டெய்லி மெயில் பத்திரிகைக்கு பேட்டி அளித்த ஸ்டூவர்ட் பிராட் கூறியதாவது:

“கடந்த ஆஷஸ் தொடர் போல் கடினமான ஒன்று வேறெதுவும் இருக்க முடியாது. அதனால் கடந்த ஆஷஸ் தொடரை நான் உண்மையான ஆஷஸ் தொடராகக் கருதமாட்டேன். ஆஷஸ் தொடரின் விளக்கம் என்னவெனில் அது ஒரு உயர்மட்ட விளையாட்டு, நிறைய உணர்ச்சிகளுடன் வீரர்கள் அனைவரும் தங்கள் ஆட்டத்தில் உச்சத்தில் இருப்பதாகும். கடந்த ஆஷஸ் தொடர் அப்படிப்பட்ட உயர்மட்ட தொடர் அல்ல. கோவிட்டினால் பயிற்சிகள் பாதிக்கப்பட்டன. வெளியில் செல்ல முடியவில்லை. சோஷியலைசிங் இல்லாமல் போய் விட்டது. கடந்த ஆஷஸ் தொடரை ‘வெற்றுத் தொடர்’ என்று பெயரிட விரும்புகின்றேன்.

இப்போதெல்லாம் நாங்கள் ஆடும் முறை வேறு. எங்களுடைய இந்த புதிய முறை அதிரடி ஆட்டத்தை ஆஸ்திரேலியா எங்கள் பாணியிலேயே எதிர்கொண்டால் உற்சாகமான தொடராக இருக்கும். எங்கள் ஆட்டத்தின் மூலம் அவர்கள் ஆட்டத்தையும் மாற்ற முடிந்ததெனில் அவர்கள் தவறுகள் இழைப்பார்கள் அது எங்களுக்குச் சாதகமாக அமையும். ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன், கவாஜா ஆகியோர் கால அவகாசம் எடுத்துக் கொண்டு நீண்ட நேரம் ஆடுபவர்கள். அவர்களிடத்தில் கொஞ்சம் சீண்டினால் அவர்கள் யோசிக்கத் தொடங்குவார்கள். ‘நாமும் ஏன் வேகமாக ஆடக்கூடாது, நாம் ஏன் ஆட்டத்தை இன்னும் விரைவு கதிக்குக் கொண்டு செல்லக் கூடாது’ என்று அவர்களை நினைக்கவைத்து விட்டால் எங்களுக்கே சாதகம்.

ஜாக் லீச் பவுலிங்கிற்கே லாங் ஆன் லாங் ஆஃப் பீல்டர்கள் கிடையாது. பென் ஸ்டோக்ஸ் அப்படித்தான் யோசிக்கின்றார். மிட் ஆன் மிட் ஆஃப் தான், அப்படியே வீசு என்கிறார். அவர்கள் உன்னை அடிக்கட்டும் என்கிறார். எனவே எல்.பி.டபிள்யூவை விட மிட் ஆன் மிட் ஆஃபில் அவுட் ஆகும் வாய்ப்பை ஏற்படுத்துகிறார். எனவே ஸ்மித் முதல் பந்தே இறங்கி வந்து மிட் ஆஃபில் கேட்ச் கொடுப்பதை ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன். அப்படி அவரை அவுட் செய்வது கிளாசிக்” என்று ஆஸ்திரேலியாவை சீண்டியுள்ளார் ஸ்டூவர்ட் பிராட்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE