தனது நாட்டைவிட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை உயர்த்திப் பேசிய மே.இ. தீவுகள் வீரர் ரஸல்

By ஆர்.முத்துக்குமார்

தன் நாடே தன் மீது இவ்வளவு முதலீடு செய்யாது என்றும் ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உரிமையாளர்கள் தன் மீது அவ்வளவு முதலீடு செய்துள்ளார்கள் என்றும் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் கூறியுள்ளார்.

தன் சொந்த நாட்டு அணிக்கு ரஸல் ஆடி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இருக்கும். ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்காக 10வது சீசனாக தொடர்ந்து ஆடி வருகிறார். ஐபிஎல் தொடரில் சில அணிகள் தங்கள் பெரிய ஸ்பான்சர் வீரர்களை விட்டு விடாது. சிஎஸ்கேவுக்கு எந்நாளும் தோனி, ஆர்சிபிக்கு எப்போதும் கோலி, மும்பைக்கு எத்தினமும் ரோஹித் சர்மா, அதே போல் சில அயல்நாட்டு வீரர்களும் நீண்ட காலமாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். அதில் டேவிட் வார்னர் குறிப்பிடத்தகுந்த வெளிநாட்டு வீரர். ஏ.பி.டிவில்லியர்ஸ் தொடர்ந்து ஆர்சிபிக்கு ஆடினார், ஷேன் வாட்சன், பிராவோ சிஎஸ்கேவுக்கு ஆடினர். பொலார்ட், மலிங்கா மும்பை இந்தியன்ஸின் ஐகான் வீரர்கள் என்று சொல்லலாம், அதேபோல்தான் ஆந்த்ரே ரஸலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் கொண்டாடட்டும். அதற்காக தன் நாட்டு அணியை குறைகூறலாமா? ஆனால் அதைத்தான் செய்தார் ரஸல். இவரது முழங்கால் அறுவை சிகிச்சைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் செலவு செய்திருக்கலாம். ஒரு பணக்கார முதலாளிக்கும் ஏழையான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.

கிறிஸ் கெயில், பிராவோ, பொலார்ட், ரஸல், சுனில் நரைன் போன்றோரிடம் இருக்கும் நிதியாதாரம் வெஸ்ட் இண்டீஸ் ஒட்டுமொத்த வாரியத்திடமுமே இருப்பது சந்தேகமே. அது ஐசிசி-யை நம்பி இயங்குகின்றது. ஐசிசியும் வருமானத்திற்காக மும்மூர்த்திகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடரையே எதிர்காலப் பயணத் திட்டத்தில் அதிகம் வைக்கின்றன. கடந்த ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் ஆடிய டெஸ்ட் போட்டிகள் வெறும் 4 தான். இப்படி ஒரு வாரியத்தை, ஒரு நாட்டின் கிரிக்கெட்டை ஐசிசி போன்ற அமைப்பு சிறுக சிறுக அழிப்பது தெரியாமல் பேசுகிறார் ஆந்த்ரே ரஸல்.

அவர் கூறியது இதுதான்: சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் எங்கு இருந்தேன். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எனக்காக பல விஷயங்களைச் செய்தது. என் முழங்கால்களுக்கான முறையான சிகிச்சைகளைப் பெற்றுத் தந்தது. உள்ளபடியே இது எனக்கு மிகப்பெரிய விஷயமாகும். வேறு எந்த அணியும், ஏன் என் நாடே என் மீது இத்தனை முதலீடு செய்யாது. நான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன் .

வேறு எந்த அணியுடனும் நான் இருக்க விரும்பவில்லை. 9 ஆண்டுகளாக இந்த அணிக்காக ஆடிவருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இவர்களுடன் நெருக்கமாகவே ஆகிக் கொண்டிருக்கிறேன். கிரிக்கெட் இல்லாத காலத்திலும் நான் வெங்கியுடன் தொடர்பிலிருக்கிறேன். நான் அவரை மிகவும் மதிக்கிறேன். இவ்வாறு கூறுகிறார் ரஸல்.

கிரிக்கெட் எங்கு போய் கொண்டிருக்கின்றது என்பதற்கு ரஸலின் இந்தக் கூற்று பொருந்தும். உரிமையாளர்கள் வீரர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வது பாராட்டுக்குரியதே. எனவே கொல்கத்தாவை பாராட்டுவதில் தவறில்லை. ஆனால் தன் நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் நிலை என்ன என்பதை அறியாமலும் ஐசிசி அரசியல் என்னவென்பதை அறியாமலும் தன் நாட்டு வாரியத்தைக் குறைகூறுவதுதான் தவறாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE