ஃபகர் ஜமானின் காட்டடி 180 நாட் அவுட்: பாகிஸ்தானின் 2-வது சாதனை சேசிங்!

By ஆர்.முத்துக்குமார்

ராவல்பிண்டியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 336 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி அனாயசமாக விரட்டி 337/3 என்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இது பாகிஸ்தான் அணியின் 2-வது பெரிய வெற்றிகர சேஸிங் ஆகும். நியூஸிலாந்து அணி எடுத்த 336 ரன்கள் பாகிஸ்தான் மண்ணில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

நியூஸிலாந்தின் டேரல் மிட்செல் 119 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் விளாசி 129 ரன்கள் எடுத்தார். கேப்டன் டாம் லேதம் 85 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்சருடன் 98 ரன்களை விளாசினார். சாத் போவ்ஸ் என்ற தொடக்க வீரர் 51 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். 45.3 ஓவர்கள் வரை நின்ற டேரில் மிட்செல் முதலில் 53 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். பிறகு 102 பந்துகளில் சதம் கண்டார். அடுத்த 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தாலும் அவர் கொஞ்சம் முன்னமேயே அடித்திருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது.

ஏனெனில் அதிரடி மன்னன் மார்க் சாப்மேனுக்கு இதனால் ஓவர்கள் இல்லாமல் போனதால் 360-375 ரக பிளாட் பிட்சில் 336 ரன்கள் போதாமலாகிவிட்டது. அதோடு இஷ் சோதி 10 ஓவர்களில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 79 ரன்களை விட்டுக்கொடுத்ததும் பாகிஸ்தான் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது. ரச்சின் ரவீந்திரா தன் பங்குக்கு 10 ஓவர்களில் 75 ரன்கள் கொடுத்தார்.

பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஜமான் 144 பந்துகளில் 17 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 180 ரன்கள் எடுத்து இறுதி வரை நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், கேப்டன் பாபர் அசாம் 65 ரன்களையும், எப்போதுமே பார்மில் இருக்கும் முகமது ரிஸ்வான் 41 பந்துகளில் 54 ரன்களையும் விளாசினர்.

பாபர் அசாமுடன், பகர் ஜமான் சேர்ந்து எடுத்த 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் சேசிங்கை வலுப்படுத்தியது. பிறகு ரிஸ்வானின் இன்னிங்ஸ் நியூசிலாந்தின் கையிலிருந்து ஆட்டத்தைப் பறித்துச் சென்றது. நியூசிலாந்து அணி முதல் 16 ஓவர்களில் 100 பிறகு 33.3 ஓவர்களில் 200 என்று ரன் ரேட்டை உயர்த்த வேண்டிய தருணத்தில் உயர்த்தாமல் ஆடியதுதான் தோல்விக்குக் காரணம். அடுத்த 17 ஓவர்களில் 136 ரன்களை விளாசியும் பயனில்லாமல் போனது. கடைசி 3 ஓவர்களை பாகிஸ்தான் பவுலர்கள் டைட்டாக வீசியதும் நியூஸிலாந்து மட்டுப்பட்டதற்குக் காரணமாக அமைந்தது.

பாகிஸ்தான் அணி இன்னிங்ஸை அபாரமாக தொடங்கியது. ஓவருக்கு 7 ரன்கள் என்று வந்து கொண்டு இருந்தது. பாபர் அசாம் இறங்கியவுடன் வழக்கம் போல் திணறினார். அப்போதே அவரை கழற்ற முயற்சி செய்திருக்க வேண்டும். முதல் 25 பந்துகளில் 16 ரன்களை மட்டுமே எடுத்தார்.

டேரில் மிட்செல் போல் மந்தம் காட்டாமல் பகர் ஜமான் விரைவு கதியில் அதிரடி முறைக்கு வந்தார், இஷ் சோதி வந்தவுடன் குஷியாகி ஒரே ஓவரில் 17 ரன்களை விளாசினார். 83 பந்துகளில் தன் சதத்தை எடுத்தார். மறுமுனையில் பாபர் அசாம் தடவலுக்குப் பிறகு செட்டில் ஆகி அரைசதம் கண்டார். சோதியை ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்த பாபர் அசாம் பிறகு வெளியேறினார். அப்துல்லா ஷஃபீக்கை ஷிப்லி வீழ்த்த நியூசிலாந்துக்கு கொஞ்சம் ஹோப் இருந்தது. ஆனால் ரிஸவான் அந்த நம்பிக்கையை தன் அதிரடியினால் சிதறடித்தார். ஆட்ட நாயகனாக ஃபகர் ஜமான் தேர்வு செய்யப்பட்டார். 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 2-0 என்று முன்னிலை வகிக்கின்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE