IPL 2023: KKR vs GT | கில், விஜய் சங்கர் விளாசல் - கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத்!

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16ஆவது ஐபிஎல் சீசனின் இன்றைய 39-வது லீக் ஆடத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெகதீசன் 15 ரன்களில் 2ஆவது ஓவரிலேயே கிளம்பிவிட்டார்.

ரஹ்மானுல்லா குர்பாஸ் ஒருபுறம் சரியாத சுவர்போல நிலைத்து நிற்க, மறுபுறம் வந்த ஷர்துல் தாக்கூர் ரன் ஏதும் எடுக்காமலும், வெங்கடேஷ் ஐயர் 11 ரன்களிலும், நிதிஷ் ராணா 4 ரன்களிலும் வெளியேறினர். 7 சிக்சர்களை விளாசி 39 பந்துகளில் 81 ரன்களை குவித்து அதிரடி காட்டிய ரஹ்மானுல்லா குர்பாஸை, நூர் அகமது விக்கெட்டாக்கி குஜராத் அணி பெருமூச்சு விடும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார்.

ரின்கு சிங்கும் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த, ஆண்ட்ரே ரஸ்ஸல் 3 சிக்சர்களை அடித்து நம்பிக்கை கொடுத்தாலும் இறுதிப் பந்தில் அவுட்டாக, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 179 ரன்களைச் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் முஹம்மது சமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது, ஜோசுவா லிட்டில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் விருத்திமான் சாஹா 10 ரன்களில் கிளம்பினார். ஹர்திக் பாண்ட்யாவும் 26 ரன்களுடன் ஏமாற்றம் கொடுத்தார். சுப்மன் கில் ஆட்டம் நம்பிக்கை கொடுத்தாலும் 49 ரன்னில் அவர் அவுட்டானது ஏமாற்றம். இப்படியாக 15 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 129 ரன்களைச் சேர்த்தது. விஜய் சங்கரின் 5 சிக்சர்களும், டேவிட் மில்லரின் ஸ்கோரும் இணைந்து 18 ஓவர்களுக்குள் மேட்சை முடிக்க உதவியது. இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வெற்றி கொண்டது குஜராத்.

கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரேன், ரஸல், ஹர்ஷீத் ரானா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE