பஞ்சாப் கிங்ஸை 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

By செய்திப்பிரிவு

மொகாலி: நடப்பு ஐபிஎல் சீசனின் 38-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. 258 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி 201 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த லக்னோ 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. மேயர்ஸ் மற்றும் ஸ்டாய்னிஸ், அரைசதம் கடந்து அசத்தினர். பதோனி, 43 ரன்கள். பூரன் 45 ரன்கள் எடுத்திருந்தார்.

258 ரன்களை விரட்டிய பஞ்சாப் அணிக்கு தொடக்கம் எதிர்பார்த்தபடி அமையவில்லை. கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் என இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். சிகந்தர் ராஸா மற்றும் அதர்வா டைடும் இணைந்து 78 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராஸா, 22 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து அதர்வா டைட், 36 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அதன்பின்னர் லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தனர். இருந்தும் ரன் குவித்த அதே வேகத்தில் விக்கெட்டையும் விரைவாக இழந்தனர். 19.5 ஓவர்கள் முடிவில் 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது பஞ்சாப். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது லக்னோ.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE