துல்லியமாக வீசுவதிலேயே கவனம்: சொல்கிறார் வருண் சக்ரவர்த்தி

By செய்திப்பிரிவு

பெங்களூரு: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் பந்து வீச்சில்மாறுபாடுகளை காண்பிப்பதை விட துல்லியமாக வீசுவதிலேயே கவனம் செலுத்தி வருவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

31 வயதான வருண் சக்ரவர்த்தி நேற்று முன்தினம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். இந்த ஆட்டத்தில்4 ஓவர்களை வீசிய வருண் சக்ரவர்த்தி27 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதைதட்டிச் சென்றார். போட்டி முடிவடைந்ததும் வருண் சக்ரவர்த்தி கூறியதாவது:

வெவ்வேறு விதங்களில் பந்துவீசுவதை விட துல்லியமாக வீசுவதிலேயே அதிக வேலை செய்துள்ளேன். இதற்காக சென்னையில் உள்ள எனது சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் பிரதிபனுடன்இணைந்து பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டேன். இது பலனை கொடுத்துள்ளது.

அதை விட முக்கியமானது வெற்றிக்காக கையாளப்படும் வழி முறைகள். இந்த வகையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் என்ன கூறினாலும் அது எனக்கு எப்போதும் வேலை செய்கிறது. எனது மறுபிரவேசத்தில் பிரதிபனும், அபிஷேக் நாயரும் மிகச் சிறந்த பங்கு வகித்துள்ளனர்.

பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடிய முந்தைய போட்டிகளின் வீடியோக்களை நான் பார்த்தேன். அந்த அணியின் பேட்ஸ்மேன்களின் தொழில்நுட்ப அம்சங்களையும், அவர்கள் குறிவைத்து பந்துகளை அடித்த இடத்தையும் நன்றாக பார்த்தேன். அந்த விஷயங்களில் கவனம் செலுத்தினேன்.

நீங்கள் வீசும் ஓவ்வொரு பந்தையும் நம்பிக்கையுடன் வீசவேண்டும். நீங்கள் நம்பிக்கையை நழுவவிட்டால் உங்களது முயற்சி பந்து வீச்சில் பிரதிபலிக்காது. இளம் சுழற்பந்து வீச்சாளரான சுயாஷ் ஷர்மா, நாட்டின் எதிர்காலத்திற்கான வீரர் என்று என்னால் கூற முடியும். அவர் ஒரு அற்புதமான திறமைசாலி. நாங்கள் விளையாடும் கிரிக்கெட்டின் அளவை அவர் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அவர் தேசிய அணியில் இடம் பெறுவதற்கான வழியை விரைவில் காண முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

வருண் சக்ரவர்த்தி கடந்த 2021-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால் அவரது பந்து வீச்சுபெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து கடந்த ஆண்டு ஐபிஎல்தொடரிலும் எதிர்பார்த்த அளவில் வருண் சக்ரவர்த்தி சிறப்பாக செயல்படவில்லை. 11 ஆட்டங்களில் விளையாடிய அவரால் 6 விக்கெட்களே கைப்பற்ற முடிந்தது.

எனினும் மனம் தளராமல் தீவிர பயிற்சியின் மூலம் இழந்த பார்மை மீட்டெடுத்துள்ளார் வருண் சக்ரவர்த்தி. பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக் ஆகியோரது விக்கெட்களை முக்கியமான கட்டத்தில் வீழ்த்தியிருந்தார். இந்த சீசனில்8 ஆட்டங்களில் 13 விக்கெட்களை கைப்பற்றியுள்ள வருண் சக்ரவர்த்தி அதிக விக்கெட்கள் வேட்டையாடி உள்ளவர்களின் பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் உள்ளார்.

இன்றைய ஆட்டம்

பஞ்சாப் - லக்னோ

இடம்: மொகாலி; நேரம்: இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோசினிமா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE