ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் | கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி.சிந்து!

By செய்திப்பிரிவு

துபாய்: ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்தனர். அதேவேளையில் லக்சயா சென் முதல் சுற்றுடன் வெளியேறினார்.

துபாயில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, 17-ம் நிலை வீராங்கனையான சீன தைபேவின் வென் ஷி சூ-வை எதிர்த்து விளையாடினார். 46 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 11-ம் நிலை வீராங்கனையான சிந்து 21-15, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் சிந்து, உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹன் யி-யை எதிர்கொள்கிறார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-13, 21-8 என்ற நேர் செட்டில் பஹ்ரைனின் அட்னான் இப்ராஹிமை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 25 நிமிடங்களில் முடிவடைந்தது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்ரீகாந்த், உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கோடை நரோகாவுடன் மோதுகிறார். காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்ற இந்தியாவின் லக்சயா சென் 7-21, 21-23 என்ற நேர் செட்டில் உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சிங்கப்பூரின் லோ கியன் யி-யிடம் தோல்வி அடைந்தார்.

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் டீரிஸா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 17-21, 21-17, 21-18 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் லானி ட்ரியா மாயாசாரி, ரிப்கா சுகியார்தோ ஜோடியை தோற்கடித்தது. இந்த ஆட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றது. - பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE