ஆர்ச்சருக்கு முழங்கையில் அறுவை சிகிச்சை; காயத்தில் இருந்து மீண்ட பேர்ஸ்டோ 97 ரன்கள் குவிப்பு!

By செய்திப்பிரிவு

இங்கிலாந்து மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முழங்கை பகுதியில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போல மற்றொரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான ஜானி பேர்ஸ்டோ காயத்தில் இருந்து மீண்டு வந்து 88 பந்துகளில் 97 ரன்கள் குவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்ச்சர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் விளையாடி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார். இந்தச் சூழலில் அவர் வலது முழங்கை பகுதியில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வகையில் பெல்ஜியம் பயணித்துள்ளதாக தெரிகிறது. அவர் ராஜஸ்தான் அணிக்கு எதிராக வரும் 30-ம் தேதி நடைபெறும் போட்டியில் களத்திற்கு திரும்புவார் எனவும் தகவல்.

கடந்த செப்டம்பரில் கோல்ஃப் விளையாடிய போது காயமடைந்த இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ளதாக தெரிகிறது. எதிர்வரும் ஆஷஸ் தொடருக்கு தகுந்த உடற்தகுதியுடன் இருக்கும் வகையில் அவர் உள்ளூர் அளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் நாட்டிங்ஹாம்ஷையருக்கு எதிராக யார்க்ஷயரின் இரண்டாவது லெவன் அணிக்காக 88 பந்துகளில் 97 ரன்கள் எடுத்துள்ளார். 13 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் இதில் அடங்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE