ஷார்ஜா மைதானத்தில் ‘சச்சின் டெண்டுல்கர் ஸ்டாண்ட்’!

By செய்திப்பிரிவு

ஷார்ஜா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயர் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தின் ஸ்டாண்டுக்கு சூட்டப்பட்டுள்ளது. அவரது 50-வது பிறந்த நாளன்று இந்த கவுரவத்தை அவருக்கு வழங்கி உள்ளது ஷார்ஜா கிரிக்கெட் மைதான நிர்வாகம்.

அதோடு ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் பதிவு செய்த அந்த இரண்டு சதங்களின் 25-வது ஆண்டு கொண்டாட்டமாகவும் இது அமைந்துள்ளது. கடந்த 1998-ல் ஷார்ஜா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஏப்ரல் 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் பதிவு செய்திருந்தார் சச்சின்.

கிரிக்கெட் விளையாட்டுக்காக சச்சின் அளித்த பங்களிப்புக்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்க விரும்பினோம். அதனால் எங்களால் முடிந்த இதை செய்துள்ளோம் என ஷார்ஜா மைதானத்தின் சிஇஓ, கலாஃப் புகாரீர் தெரிவித்துள்ளார்.

“இந்த நேரத்தில் நான் அங்கு இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக சில பணிகள் காரணமாக என்னால் அது முடியாமல் போனது. ஷார்ஜாவில் விளையாடுவது எப்போதுமே அற்புதமான அனுபவமாக இருந்துள்ளது. இந்திய ரசிகர்கள் உட்பட உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷார்ஜா என்றும் ஸ்பெஷலான ஆடுகளம்தான். கலாஃப் புகாரீர் மற்றும் அவரது குழுவிற்கு நன்றி” என சச்சின் தெரிவித்துள்ளார். ஷார்ஜா மைதானத்தின் மேற்கு ஸ்டாண்ட் இப்போது சச்சின் டெண்டுல்கர் ஸ்டாண்ட் என பெயரிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE