IPL 2023: DC vs SRH | டெல்லிக்கு 2-வது வெற்றியை கொடுத்த பவுலர்கள்: 7 ரன்களில் வீழ்ந்தது ஹைதராபாத்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஐபிஎல் இன்றைய 34-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

145 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு ஹாரி ப்ரூக் இம்முறையும் ஏமாற்றினார். 7 ரன்களுக்கு அவர் முதல் விக்கெட்டானாலும், மற்றொரு ஓபனர் மயங்க் அகர்வால் பொறுப்பாக விளையாடி 49 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ஆனால் அவருக்கு பக்கபலமாக மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை.

ராகுல் திரிபாதி 21 பந்துகளுக்கு 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். அபிஷேக் ஷர்மா, கேப்டன் எய்டன் மார்க்ரம் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் விக்கெட் ஆக, ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் அதிரடி காட்டினாலும், இறுதி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டபோது அவரால், அதை எடுக்க முடியவில்லை.

கடைசி ஓவரை இம்பேக்ட் ப்ளேயர் முகேஷ் குமார் திறமையாக வீசி ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் டெல்லி அணிக்கு இரண்டாவது வெற்றியை தேடிக்கொடுத்தார். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்த சன்ரைசர்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

டெல்லி அணி தரப்பில் நார்ஜே, அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

டெல்லி இன்னிங்ஸ்: ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி 3-வது பந்திலேயே பிலிப் சால்ட் விக்கெட்டாகி டெல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷை நடராஜன் எல்பிடபள்யூ முறையில் வெளியேற்றினார். கடந்த போட்டிகளில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 21 ரன்களில் கிளம்பினார். சர்ஃபராஸ்கானும், அமன் ஹக்கீம் கானும் அவுட்டாக 7ஆவது ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை எடுத்தார் வாஷிங்டன் சுந்தர். இதனால் 10 ஓவர் முடிவதற்குள் 5 விக்கெட்டை பறிகொடுத்த டெல்லி அணி 72 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.

அக்சர் படேல், மணீஷ் பாண்டே நிதானமாக ஆடி விக்கெட் இழப்பை தடுக்க முயற்சித்தாலும் விதி அக்சர் படேலை விடவில்லை. புவனேஷ்குமார் பந்தில் போல்டாகி இந்த ஆட்டத்தில் அணியின் தனிநபர் ஸ்கோர்களில் அதிகபட்ச ஸ்கோரான 34 ரன்களைச் சேர்த்துவிட்டு கிளம்பினார். அதே ஸ்கோருடன் ரன்அவுட்டாகி மனீஷ் பாண்டேவும் கிளம்ப நண்பனின் பிரிவை ஏற்காத ‘நட்புக்காக’ படம் போல களம் மாறியது. ரிபால் படேல், அன்ரிச் நார்ட்ஜே அடுத்தடுத்து ரன்அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 144 ரன்களை மட்டுமே சேர்த்தது.

ஹைதராபாத் அணி தரப்பில் வாஷிங்கடன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், புவேனஷ்குமார் 2 விக்கெட்டுகளையும், நடராஜன் 1 விக்கட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE