நினைவிருக்கா | 'மற்றவர்களால் பந்தை தொடக் கூட முடியவில்லை. ஆனால் சச்சின்...' - சவுரவ் கங்குலி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சச்சின் டெண்டுல்கரின் பெரும்பாலான கிரிக்கெட் கேரியரில் சக வீரராக, கேப்டனாக பயணித்தவர்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. கடந்த 1992-ல் ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் சச்சின் பதிவு செய்த சதம்தான் அவரது கிரிக்கெட் கரியரின் அபார சதம் என கங்குலி தெரிவித்துள்ளார்.

சதங்களில் சதம் கண்ட கிரிக்கெட்டின் கடவுளுக்கு இன்று பிறந்த நாள். கடந்த 1973-ல் இதே நாளில் பிறந்தார் சச்சின். இப்போது தனது வயதில் அரைசதம் கடந்துள்ளார். இந்த நன்னாளில் அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள், முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் சச்சினின் 1992 பெர்த் சதம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

“பெர்த் ஆடுகளம் நிதானமானதாக இருக்கும். விக்கெட்டில் பவுன்ஸ் அதிகம் இருக்கும். அதுவும் சச்சினின் உயரம் அந்த பவுன்ஸை எதிர்கொள்ள சவாலானதாக இருக்கும். அதை எதிர்த்து ஷாட் ஆடுவது லேசான காரியம் அல்ல. சிறப்பான ஆஸ்திரேலிய பவுலிங் யூனிட்டுக்கு எதிராக விளையாடி சதம் பதிவு செய்தார். என்னைக் கேட்டால் அதுதான் அவரது கிரிக்கெட் கேரியரின் சிறந்த இன்னிங்ஸ் என்று சொல்வேன்.

அப்போது நம் அணியின் பெரும்பாலான பேட்ஸ்மேன்களால் பந்தை தொடக்கூட முடியவில்லை” என கங்குலி தெரிவித்துள்ளார். சச்சின்@50 புத்தகத்தில் கங்குலி இதை தெரிவித்துள்ளார். கங்குலியும், சச்சினும் அண்டர் 14 கிரிக்கெட் முகாமில் இருந்தே நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE