“எனக்கு பிரியாவிடை கொடுக்க முன்வந்த கொல்கத்தா ரசிகர்களுக்கு நன்றி” - தோனி

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 33-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. இந்நிலையில், தனக்கு பிரியாவிடை கொடுக்க முன்வந்த கொல்கத்தா ரசிகர்களுக்கு நன்றி என்று போட்டிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசன் தோனி பங்கேற்று விளையாடும் கடைசி தொடராக இருக்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஹோம் போட்டிகள் மட்டுமின்றி அசலூரில் நடைபெறும் ‘அவே’ போட்டிகளின்போதும் ரசிகர்களின் ஆதரவு அமர்க்களமாக உள்ளது. மைதானம் முழுவதும் மஞ்சள் ஜெர்ஸி அணிந்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்து இதைச் சொல்ல முடியும். சென்னை அணி மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா நகரில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் நடப்பு சீசனில் விளையாடிய போட்டிகளை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.

ஓய்வு பெற உள்ளாரா என்பதே சஸ்பென்ஸ்தான். ஆனால், அதில் அடிபடும் பெயர் கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய ஆளுமை. சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய ஒருவருக்கு கொடுக்கப்படும் கவுரவம் இது. அவர் விளையாடிய கடைசி சர்வதேசப் போட்டி அவ்வளவாக கொண்டாடப்படவில்லை. அதோடு ரசிகர்களின் நெஞ்சங்களை வென்ற ஒரு கிரிக்கெட் வீரருக்கு/தலைவனுக்கு கொடுக்கப்படும் வரவேற்பு இது.

“மைதானத்திற்கு அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து சிஎஸ்கே-வுக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனக்கு தெரிந்து அடுத்தப் போட்டியின்போது இவர்கள் அனைவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஜெர்ஸியில் வருவார்கள் என நினைக்கிறேன். இதன்மூலம் அவர்கள் எனக்கு பிரியாவிடை கொடுக்க முன்வந்துள்ளனர். கொல்கத்தா ரசிகர்களுக்கு நன்றி” என தோனி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE