'ஓடி வந்து பந்து வீசுவதில் செய்த மாற்றமே வெற்றிக்குக் காரணம்' - மனம் திறக்கும் அர்ஷ்தீப் சிங்

By செய்திப்பிரிவு

மும்பை: ஓடி வந்து பந்து வீசுவதில் செய்த மாற்றமே எனது வெற்றிக்குக் காரணம் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். மிகவும் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து திலக் வர்மா, நேஹல் வதேராவின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் அவர் மொத்தம் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

வெற்றி குறித்து அர்ஷ்தீப் சிங் கூறியதாவது: அழுத்தமான சூழலில் அமைதியாக இருப்பது எனது வெற்றிக்குக் காரணம். மேலும், நான் ஓடி வந்து பந்து வீசுவதில் செய்த மாற்றங்கள் இந்த ஐபிஎல் சீசனில் என்னுடைய வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன். பந்து வீசுவதற்கு ஓடி வரும் விதத்தை மாற்றியது நோ-பால் வீசாமல் இருக்க எனக்கு உதவியது.

கிரிக்கெட் போட்டிகளில் எப்போது விக்கெட் எடுத்தாலும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த வெற்றி எனக்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE