“புள்ளிப் பட்டியலால் ஓர் அணியின் தன்மையை விளக்க முடியாது” - விராட் கோலி திட்டவட்டம்

By ஆர்.முத்துக்குமார்

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 556 நாட்களுக்குப் பிறகு விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டார். முகமது சிராஜ் அட்டகாசமாக வெறியுடன் வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற. பேட்டிங்கில் டுபிளெசிஸ், கோலி ஆகியோரது பங்களிப்பினால் 174 ரன்களை ஆர்சிபி அட்டகாசமாக தடுத்து வெற்றி கண்டது.

முகமது சிராஜின் திகைப்பூட்டும் ஆக்ரோஷ பந்து வீச்சினால் பெற்ற 4 விக்கெட்டுகள் அவருக்கு பர்ப்பிள் தொப்பியை பெற்றுத்தந்துள்ளது. கோலியும் டுபிளெசிஸும் 16 ஓவர்கள் வரை நின்றாலும் ஸ்கோர் 160 போகாமல் 137 என்று தான் இருந்தது. விராட் கோலி பவர் ப்ளேவுக்குப் பிறகு ஸ்லோ ஆகி விடுகிறார் என்பது ஒரு பெரிய விவாதமாகக் கிளம்பிக் கொண்டிருக்கின்றது. அதற்கு கோலி ஆயிரம் காரணம் சொன்னாலும் உண்மையான காரணம் என்னவெனில் கோலி, டுபிளெசிஸ், மேக்ஸ்வெல் நீங்கலாக இவர்களுக்குப் பிறகு ஆர்சிபியில் அடிக்க ஆளில்லை என்பதே உண்மை. இதை கோலி வெளியே சொல்ல முடியுமா? அதனால் பிட்ச், கண்டிஷன் என்றெல்லாம் சொல்ல வேண்டியிருக்கின்றது.

பவர் ப்ளேயிலும் சரி, அதற்குப் பிறகும் சரி ஸ்பின் பந்து வீச்சை கோலி அடிக்க முயற்சி கூட எடுக்க முடியாமல் ஆடுவது ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிரான அவரது பலவீனமா அல்லது நாம் மேற்கூறிய பேட்டிங் வரிசை பலமில்லாதுதான் காரணமா என்பதை அவ்வளவு எளிதில் கூறி விட முடியாது. நேற்று பவர் ப்ளேவுக்குப் பிறகு 14வது ஓவரில்தான் கோலி பவுண்டரி ஒன்றை அடிக்கிறார் என்றால் இதை உத்தி என்று கூற முடியுமா என்று சந்தேகமாகவே உள்ளது. ராகுல் சாஹர் வீசும் போது கோலி அவரை அடிக்க முயற்சி கூட எடுக்கவில்லை. ஏன்? தொடக்க வீரர்கள் டி20-ஐ பொறுத்தவரை பவர் ப்ளேயுடன் முடித்துக் கொள்ள வேண்டும், அதுவும் 6 ஓவர்களில் குறைந்தது 60-65 ரன்களையாவது எடுத்து விட்டு ஒருவர் பவர் ப்ளேவுக்குப் பிறகு ரிஸ்க் எடுத்து ரன் ரேட்டை அதிகரிக்க ஆட வேண்டும். பவர் ப்ளேவுக்குப் பிறகு ஸ்லோ ஆவது எந்த உத்தியிலும் சேராதே?

16 ஓவர்கள் சென்று 137 ரன்கள் மட்டுமே எனும்போது கிளென் மேக்ஸ்வெல் வந்தவுடனேயே, கண்கள் அந்த விளக்கொளிக்கு ‘செட்’ ஆகும் முன்பே, தூக்கி அடித்து அவுட் ஆனதற்கு இதுதான் காரணம். டுபிளெசிஸ் சமரசம் இல்லாமல் அதிரடியாக ஆடி 84 ரன்களை எடுக்காவிட்டால் 174 ரன்கள் போதியிருக்காது. வேறு நல்ல அணிகள் இதனை சேஸ் செய்திருக்கும், அப்படி சேஸ் செய்திருந்தால் கோலியின் பேட்டிங் ஸ்லோ தான் காரணம் ஆகியிருக்கும். கோலி இந்த விஷயத்தை கவனத்தில் கொள்வது என்றே நிபுணர்கள் பலரும் கருதுகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி அணி 6 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று 5ம் இடத்தில் இருப்பது பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் கூறியதாவது:

“புள்ளிப் பட்டியல் ஒரு அணியின் தன்மையை விளக்கி விட முடியாது. 13 அல்லது 14வது போட்டியின் போதுதான் அதை பார்த்து என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்வோம். அதில் அணியின் இடத்தை வைத்து, ஒரு அணியின் பலத்தை எடை போட முடியாது. நம் எண்ணங்களை அது தீர்மானிக்க முடியாது. நானும், டுபிளெசிஸும் நின்றிருந்தால் 190-200 ரன்கள் வரை சென்றிருப்போம். ஆனால் இந்தப் பிட்சில் 175 நல்ல ஸ்கோர் என்றே நினைத்தோம்.

நான் கூறியதெல்லாம் இந்த 174 ரன்கள் தேவைக்கும் அதிகமானது என்றே கூறினேன். டி20 கிரிக்கெட்டில் வெற்றி என்பது விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம்தான் கிடைக்கும். எங்கள் பீல்டிங் நன்றாக இருந்தது” என விராட் கோலி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE