'இளம் பந்து வீச்சாளர்களை கையாள்வது சவால்' - சிஎஸ்கே கேப்டன் தோனி கருத்து

By செய்திப்பிரிவு

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 6 விக்கெட்கள் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. டேவன் கான்வே 45 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 83 ரன்களையும் ஷிவம் துபே 27 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்களையும் விளாசினர்.

227 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் என்று ஆட்டத்தை நிறைவு செய்தது. சிஎஸ்கே அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் 6 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது சிஎஸ்கே. தனது 5-வது ஆட்டத்தில் 3வது தோல்வியை சந்தித்த பெங்களூரு 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

வெற்றி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியதாவது. இறுதிக்கட்ட ஓவர்களில் பந்துவீசுவது என்பது இளம் வீரர்களுக்கு கடினமான ஒன்று. ஆனால் அவர்கள், கடினமாக உழைக்கிறார்கள். இந்த பகுதியில் டுவைன் பிராவோ சிறப்பாக செயல்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் பந்து வீச்சாளர்கள் நம்பிக்கையை பெறுவார்கள். இது ஒரு குழு விளையாட்டு. பயிற்சியாளர், பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் சீனியர்கள், இளம் வீரர்களை வழிநடத்துகிறார்கள்.

ஷிவம் துபே அதிரடியாக விளையாடக்கூடியவர். உயரமான வீரர், மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து மாறுபட்டவர். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவதில் அவருக்கு பிரச்சினை உள்ளது. ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர். அவருக்காக சில திட்டங்களை வைத்திருந்தோம். நாங்கள் எதிர்பார்ப்பதை அவர், வழங்கக்கூடிய வீரராக உணர்கிறோம். இதில், எங்களைவிட அவர், நம்பிக்கை வைக்க வேண்டும்.

220 ரன்கள் குவிக்கும் போதெல்லாம் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து அதிரடியாகவே விளையாட வேண்டும். டு பிளெஸ்ஸிஸ், கிளென் மேக்ஸ்வெல் பேட்டிங்கை தொடர்ந்திருந்தால் அவர்கள் 18-வது ஓவரிலேயே வெற்றி பெற்றிருப்பார்கள். விக்கெட் கீப்பிங்கின் போது ஆட்டத்தின் சூழ்நிலைகளை மதிப்பீடு செய்வேன். போட்டியின் முடிவை பற்றி யோசிப்பதை விட என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துவேன். இவ்வாறு தோனி கூறினார்.- பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE