அர்ஜுன் விளையாடும்போது ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்தது ஏன்? - காரணத்தை விளக்கிய சச்சின்

By செய்திப்பிரிவு

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகம் ஆனார்.

23 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பையில் 1999-ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி பிறந்தார். தந்தையைப் போலவே பேட்ஸ்மேனாக உருவாகாமல் வேகப்பந்து வீச்சாளராக தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார் அர்ஜுன். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் 2018-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் யு-19 இந்திய அணிக்காக அறிமுகமாகி கவனம் பெற்றார். மேலும், சையது முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டுக்காக மும்பை அணிக்காகவும் அவர் விளையாடியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி அவரை 2021-ம் ஆண்டில் ஐபிஎல் ஏலத்தில் வாங்கியது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் அறிமுகமானார். அவருக்கு தொப்பியை, ரோஹித் சர்மா வழங்கி வாழ்த்து தெரிவித்தார் இதையடுத்து ரோஹித் சர்மாவை கட்டி அணைத்து நன்றி தெரிவித்தார் அர்ஜுன். சக அணி வீரர்களும் அர்ஜுனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்தப் போட்டியை சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா உள்ளிட்டோர் மைதானத்தில் கண்டுகளித்தனர். ஐபிஎல் போட்டி அறிமுகம் குறித்து சச்சினும் அவரது மகன் சச்சினும் சேர்ந்து தங்களது கருத்துகளை வெளிப்படுத்திய வீடியோவை ஐபிஎல் நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் முதலில் பேசும் அர்ஜுன், “இது எனக்கொரு மிகப்பெரிய பெரிய தருணம். 2008 முதல் நான் ஆதரவு அளித்து வரும் அணிக்காகவே அறிமுகமாவது என்பது சிறப்பான ஒன்று. அதுவும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவிடம் இருந்து அறிமுக தொப்பியை வாங்கியது மகிழ்ச்சியானது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சச்சின், “இது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். ஏனெனில் அர்ஜுன் விளையாடுவதை நான் இதுவரை பார்க்க சென்றதே இல்லை.

சுதந்திரமாக வெளியே சென்று, தன்னை வெளிப்படுத்தி, தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவனின் விளையாட்டை காண செல்ல மாட்டேன். நேற்றும் அப்படிதான் மைதானத்திற்குள் வரவில்லை. உள்ளே இருந்த அறையில் அமர்ந்து இருந்தேன். டக்-அவுட்டில் அமர்ந்து பார்த்தால் என்னை இங்கிருக்கும் திரையில் காண்பிப்பார்கள். அது, அர்ஜுனை அவனின் திட்டங்களில் இருந்து திசை திருப்பும். அதை விரும்பவில்லை.

எனினும், இது வித்தியாசமாக இருக்கிறது. 2008ல் நடைபெற்ற ஐபிஎல் தொடர் எனக்கான முதல் சீசன். 16 ஆண்டுகள் கழித்து அதே அணிக்காக அர்ஜுன் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என நெகிழ்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE