IPL 2023: RCB vs CSK | மிடில் ஆர்டர் சொதப்பலால் வீழ்ந்த ஆர்சிபி - 8 ரன்களில் சென்னை வெற்றி

By செய்திப்பிரிவு

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), டூ பிளெஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகளும் மோதின.

டாஸ் வென்ற ஆர்சிபி பீல்டிங்கைத் தேர்வு செய்ய சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்னில் ஆட்டமிழந்தாலும், டெவன் கான்வே அதிரடி காட்டி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அரைசதம் கடந்த அவர் 83 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முன்னதாக ரஹானே 37 ரன்கள் சேர்த்தும், இளம்வீரர் ஷிவம் துபே, தன் பங்கிற்கு வான வேடிக்கை காட்டி 52 ரன்கள் விளாசினார். இவர்கள் உதவியால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் முகமது சிராஜ், வெய்ன் பெர்னெல், விஜயகுமார் வைஷாக், ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு முதல் ஓவரில் விராட் கோலி விக்கெட்டை எடுத்து ஷாக் கொடுத்தார் ஆகாஷ் சிங். அடுத்த ஓவர் வீசிய துஷார் தேஷ்பாண்டே தன் பங்கிற்கு மஹிபால் லோமரரை பூஜ்யத்தில் வெளியேற்றினார்.

ஆர்சிபியின் ஓப்பனிங் சரிவை சந்தித்தாலும், கேப்டன் டூ பிளெஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இணைந்து அணியை மீட்டெடுத்தனர். இருவரும் சென்னை பவுலர்களை சோதித்தனர். 25 பந்துகளுக்கு முன்னதாகவே அரைசதம் கடந்து இருவரும் ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்தனர். 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்த நிலையில், 76 ரன்கள் எடுத்திருந்த மேக்ஸ்வெல்லை அவுட் ஆக்கினார் தீக்சனா. மேக்ஸ்வெல் வெளியேறிய சிறிது நேரத்தில் டூ பிளெஸிஸ்ஸும் 62 ரன்களுக்கு நடையைக்கட்டினார்.

இதன்பின் சீரான இடைவெளியில் ஆர்சிபியின் விக்கெட்களை சிஎஸ்கே பவுலர்கள் வீழ்த்தினர். எனினும், கடைசி ஓவரில் 19 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட, இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்ட பிரபுதேசாய் 3வது பந்தில் சிக்ஸ் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. எனினும், பதிரானா அடுத்த பந்தை யார்க்கராக வீசி அவரை கட்டுப்படுத்தியதுடன், கடைசி பந்தில் பிரபுதேசாய் விக்கெட்டையும் எடுத்தார்.

இதனால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூரு அணி தோல்விகண்டது. 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சென்னை அணிக்கு, நடப்பு தொடரில் இது 3வது வெற்றியாகும். சென்னை தரப்பில் இப்போட்டியில் துஷார் தேஷ்பாண்டே அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE