‘பில்டிங் ஸ்ட்ராங்கு... பேஸ்மென்ட் வீக்கு!’ - ஐபிஎல் 2023 சீசனில் சோடை போன 5 வீரர்கள்

By ஆர்.முத்துக்குமார்

ஐபிஎல் 2023 தொடரில் இதுவரை பெரிய தலைகள் எதுவும் பெரிய ஸ்கோர்களை எட்டவில்லை, முதல் சதத்தையே சன் ரைசர்ஸின் இங்கிலாந்து அதிரடி மன்னர் ஹாரி புரூக்தான் எடுத்தார். மற்றபடி ஊடகங்களாலும், ஐபிஎல் மீடியா பார்ட்னர்களாலும் ஊதிப் பெருக்கப்பட்ட, பெருக்கி ஊதப்பட்ட வீரர்கள் பலர் சோடை போயுள்ளனர். இதில் முக்கியமாக, பில்ட் அப் ஸ்ட்ராங்கு, ஆனால் பேஸ்மென்ட் வீக் ஆன 5 வீரர்களைப் பார்ப்போம்.

ஊர்பேர் தெரியாத துப்புரவுப் பணி பின்னணி கொண்ட ரிங்கு சிங் 5 சிக்சர்களை விளாசி பெயர் பெற்றார். கொஞ்சம் தவறு செய்தாலும் சென்னை சேப்பாக்கத்திலிருந்து பீச்சுக்கு அடிக்கும் எம்.எஸ்.தோனிக்கு துல்லிய யார்க்கரை வீசிய சந்தீப் ஷர்மா... இப்படியிருக்க பெரிய பில்ட் அப் கொடுக்கப்பட்ட வீரர்கள் சொதப்பலோ சொதப்பல்.

சொதப்பலில் முதலாமவர் டெல்லி கேப்பிடல்ஸின் பிரித்வி ஷா. இவருக்கு இந்த ஐபிஎல் சரியான திருப்பு முனையாக அமையும் என்றார் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். ஆனால், அவர் சொல்லும்போது இப்படிப்பட்ட ‘திருப்பு முனை’யை கருத்தில் கொண்டிருக்க மாட்டார் என்று நம்புவோமாக. இவருக்கு கொடுக்கப்பட்ட பில்ட் அப் வானுயரமானது, ஆனால் ஆட்டமோ தரைமட்டமானது.

இவர் ஒரு போட்டியில் சரியாக ஆடியிருந்தாலும் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அட்டவணையில் கடைசி இடத்தில் இருந்திருக்காது. 5 போட்டிகளில் எடுத்த மொத்த ரன்களே 34 தான். விரைவில் ஆடும் லெவனிலிருந்தே கழற்றி விடப்படுவார் என்று தெரிகின்றது.

இரண்டாமவர் ராஜஸ்தான் ராயல்ஸின் ரியான் பராக். இவர் தன்னை ஒரு ஸ்டார் பிளேயர் என்று நினைத்து கொண்டு பாடி லாங்குவேஜ் காட்டும் வழக்கமுடையவர். தானும் ஒரு ஓவரில் 4 சிச்கர்களை அடித்து வெல்ல வைப்பேன் என்று சூளுரைத்தவர். ஒரு ஓவரில் அல்ல, இதுவரை நடந்த போட்டிகளில் கூட அவர் 4 சிக்சர்களை அடிக்கவில்லை. சீசன் சீசனாக சொதப்பி வருகின்றார். 4 போட்டிகளில் இதுவரை 39 ரன்களையே எடுத்துள்ளார். ஒரு மேட்சில் இவரை அணியிலிருந்து நீக்கியே விட்டனர். இவர் மீதும் பெரிய எதிர்பார்ப்பு பில்ட் அப் செய்யப்பட்டது. ஆனால் பில்ட் அப் ஒர்க் அவுட் ஆகவில்லை. இவரைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் பேக் அப் செய்து வருவதன் மர்மம், ஓனருக்கு வேண்டப்பட்டவரோ என்ற சந்தேகத்தை எழுப்பி வருகின்றது.

மூன்றாமவர் மயங்க் அகர்வால். ஆனால், இவர் பரிதாபத்துக்குரியவர், கோலியினால் இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்டவர் பிறகு காணாமலே போய்விட்டார். அறிமுகப் போட்டியிலேயே மெல்போர்னில் நன்றாக ஆடியவர்தான். ஆனால், இவர் ஒழிக்கப்பட்ட வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸின் கேப்டனாக இருந்தார். ஆனால் இந்த ஐபிஎல் தொடரின் ஏலத்தில் ஏதாவது ஒரு அணி தன்னை எடுக்காதா என்று ஏக்கப்பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார்.

கடந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாததால் பஞ்சாப் கிங்ஸ் அணியினால் கழற்றி விடப்பட்ட அகர்வால், உள்நாட்டுக் கிரிக்கெட்டுக்குத் திரும்பினார். ஐபிஎல் தொடரில் அவருக்கு சன் ரைசர்ஸ் மறு வாழ்வு கொடுத்தது, அதுவும் ஓப்பனிங் பேட்டராக. ஆனால், இதுவரை 4 போட்டிகளில் 27 தான் இவரது அதிகபட்ச ஸ்கோர். இதுவரை ஏமாற்றம்தான். போகப்போகத்தான் தெரியும் இவரிடமிருந்து ஏதாவது ரன்கள் வருமா என்பது.

நான்காமவர் சிஎஸ்கேவின் காய கிங் தீபக் சஹார். இவர் என்ன வேகம் வீசுகிறார் என்று அடிக்கடி காயமடைகின்றார் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட இவரால் சிஎஸ்கேவுக்கு நஷ்டம்தான். இதுவரை 3 போட்டிகளில் ஆடி 94 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கூட எடுக்கவில்லை, காயமடைந்து விலகி விட்டார். இதனால் இவரது இந்திய அணி இடமும் கேள்விக்குறி ஆகிவிட்டது.

ஐந்தாமவர், நம்மை ஒரு காலத்தில் அச்சுறுத்திய ஆந்த்ரே ரஸல். முன்பெல்லாம் ரஸல் விக்கெட்டை வீழ்த்தாமல் கொல்கத்தாவை வீழ்த்த முடியாது என்றே கூறலாம். ஆனால் அத்தகைய சிங்கமான ரஸல் இப்போது சிங்கத்தின் நிழலாகக் கூட இல்லாமல் சொதப்புகிறார். கடந்த சில ஐபிஎல் சீசன்களாகவே இவர் செம சொதப்பு சொதப்பி வருகின்றார்.

ரஸலின் சாதக பலம் என்னவெனில் எங்கிருந்து வேண்டுமானாலும் பேட்டிங்கில் ஜெயிக்க வைப்பார், மிடில் ஓவர்களில் எதிரணியினரின் விக்கெட்டுகளைக் காலி செய்து ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். அன்று 3 விக்கெட்டுகளை 22 ரன்களுக்கு எடுத்தார், ஆனால் உடனே காயம் அவரை அரவணைத்துக் கொண்டது, பேட்டிங்கில் ஒரு காலத்தில் இவர் பந்தைப் பார்த்தாலே சிக்சர்தான் என்ற நிலை மாறி இன்று அடித்தாலும் மாட்டுவேனா என்கிறது. இந்த சீசனில் 5 போட்டிகளில் மொத்தமே 60 ரன்களைத்தான் எடுத்திருக்கிறார். அநேகமாக கடைசி ஐபிஎல் தொடராக அவருக்கு அமைய வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE