‘குஜராத் அணியை வீழ்த்த வேண்டும் என்ற வெறி!’ - பழிதீர்த்த ஷிம்ரன் ஹெட்மையர்

By ஆர்.முத்துக்குமார்

ஐபிஎல் 2023 டி20 தொடரின் 23-வது போட்டி நேற்று அகமதாபாத் மொடீராவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 177/7 என்ற ரன் எண்ணிக்கையை எடுக்க, தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 55 ரன்களை மட்டுமே எடுத்து திண்டாடிய நிலையில், கேப்டன் சாம்சன் (60 ரன்கள், 32 பந்துகள் 3 பவுண்டரிகள் 6 சிக்சர்கள்) மற்றும் மே.இ.தீவுகளின் அதிரடி மன்னன் ஷிம்ரன் ஹெட்மையர் 26 பந்துகளில் 2 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 56 ரன்களை விளாசி இறுதி வரை நின்று வெற்றி பெறச் செய்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆல்டைம் கிரேட் பினிஷிங் என்றால் இதுதான் என்று கூறும் அளவுக்கு அருமையான இன்னிங்ஸ் என்று இது வர்ணிக்கப்படுகின்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் கடந்த ஆண்டில் லீக் சுற்றிலும், இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டியிலும் பிறகு இறுதிப் போட்டியிலும் தோற்கடித்தது. “ஆகவே, இது ஒரு பழிதீர்ப்பு வெற்றி” என்கிறார் ஷிம்ரன் ஹெட்மையர்.

ஷமி, ஹர்திக் பாண்டியா அட்டகாசமாகத் தொடங்க தேவ்தத் படிக்கல் (26) தவிர பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஒற்றை இலக்கத்தில் வெளியேற 10.3 ஓவர்களில் 55/4 என்று தடுமாறியது. 12 ஓவர்கள் முடிந்த நிலையில் ஓவருக்கு 14 ரன்கள் தேவை, ஏறக்குறைய குஜராத் டைட்டன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸை 4வது முறையாக நொறுக்குவதை யாரும் தடுக்க முடியாது என்ற நிலைதான். குஜராத் அணியில் அல்ஜாரி ஜோசப், ரஷீத் கான், நூர் அகமட் ஆகியோர் 56 பந்துகளில் 122 ரன்களை வாரி வழங்கி 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினர். இவர்களது அடிவாங்கிய இந்த பவுலிங் அனாலிசிஸுக்குக் காரணம் ஹெட்மையர், சஞ்சு சாம்சன். இல்லையெனில் 48 பந்துகளில் 112 ரன்கள் தேவை என்ற நிலையில் வெற்றி சாத்தியமாகியிருக்குமா?

இந்த 48 பந்துகளில் ரஷீத் கானுக்கு 2 ஓவர்கள் மீதமிருந்தன. ஹெட்மையர், சஞ்சு சாம்சன் அல்ல ஹாரி புரூக், பட்லர் போன்றோரே அடிக்க முடியாத இலக்கு. ரஷீத் கான் தன் 3வது ஓவரை வீச வந்தார், சஞ்சு சாம்சன் ஹாட்ரிக் சிக்சர்களை விளாச அந்த ஓவரில் 20 ரன்கள். மறுமுனையில் தன் நாட்டு சகவீரரான அல்ஜாரி ஜோசப்பை, ஹெட்மையர் புகுந்து விளாசித்தள்ளி 25 பந்துகளில் அரைசதம் கண்டார். துருவ் ஜுரெல் 10 பந்துகளில் 18 ரன்களையும் பேட்டிங்கில் புதிய உற்சாகம் காட்டி வரும் அஸ்வின் கடைசியில் இறங்கி 3 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒருசிக்சரையும் விளாச இலக்கு ஒன்றுமில்லாமல் ஆனது. பிரமாதமாக வீசிய ஷமியே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ஜுரெல் அஸ்வின் இருவரும் 16 ரன்களை இவரது ஓவரில் விளாசினர்.

கடைசி 5 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹெட்மையர் வெற்றி பெறச் செய்தார். ஒரு கட்டத்தில் வெற்றி சாத்தியமே இல்லை என்ற நிலையிலிருந்து அரிய வெற்றியைச் சாதித்தார். நூர் அகமது பந்தை சிக்சருக்குத் தூக்கி ஹெட்மையர் பழி தீர்ப்பு வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அட்டவணையில் 8 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது.

ஆட்டம் முடிந்தவுடன் ஹெட்மையர் கூறும்போது, “8 ஓவர்களில் 100 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற ரீதியில்தான் நான் பயிற்சியே மேற்கொள்கிறேன். நம் மனத்தை அப்படியாக திட்டமிட்டு வடிவமைத்து கொண்டால் எதுவும் சாத்தியம்தான், ஆனால் இதுவரை இந்தப் பயிற்சி முறை சரியாகவே எனக்கு அமைந்து வருகின்றது. கடைசி ஓவரில் ஸ்பின்னரை எதிர்கொள்வது எனக்கு திருப்தியாக இருந்தது. ஆனால் அவர் நன்றாக வீசினார். இந்த வெற்றி அவசியமானது. இவர்களுடன் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற வெறி இருந்தது. அவர்கள் எங்களை கடந்த ஆண்டு முறை வென்றனர். ஆகவே இது ஒரு வகையில் பழிதீர்ப்பு வெற்றிதான்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE