IPL 2023 | ஒரே போட்டியில் வெங்கடேஷ் ஐயர், ரோகித் சர்மா செய்த சாதனைகள்

By செய்திப்பிரிவு

மும்பை: ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

ஐபிஎல் போட்டியில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் 8 ரன்களிலும், என். ஜெகதீசன் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் நிதீஷ் ராணா 5 ரன்களிலும், ஷர்துல் தாக்குர் 13 ரன்களிலும், ரிங்கு சிங் 18 ரன்களிலும் வீழ்ந்தனர்.

ஆனாலும் ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். 49 பந்துகளில் அவர் சதம் விளாசினார். 51 பந்துகளைச் சந்தித்த நிலையில் வெங்கடேஷ் ஐயர் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் அடங்கும். கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஆந்த்ரே ரஸ்ஸல் 11 பந்துகளில் 21 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடத் தொடங்கியது. இந்தஆட்டத்தில் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய ரோஹித் சர்மா 13 பந்துகளில் 20 ரன்கள் குவித்து வீழ்ந்தார். ஆனால்மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி கொல்கத்தா வீரர்களை மிரளச் செய்தார்.25 பந்தில் 58 ரன்களைக் குவித்து கிஷன் வீழ்ந்தார். அவரது ஸ்கோரில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும்.

சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 43 ரன்களை விளாசினார். இதில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். இஷான், சூர்யகுமார் அதிரடியின் காரணமாக பின்னர் வந்த மும்பை வீரர்கள் எளிதாக வெற்றி இலக்கை எட்டினர். டிம் டேவிட் 13 பந்துகளில் 24 ரன்களும், கேமரூன் கிரீன் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 17.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து மும்பை வெற்றி கண்டது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 4 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு முன்னேறியது.

ஆட்டநாயகன் விருதை வெங்கடேஷ் ஐயர் தட்டிச் சென்றார்.

> கொல்கத்தா அணிக்காக ஓர் இன்னிங்ஸில் அதிகபட்ச சிக்ஸர்களை விளாசியவர்கள் பட்டியலில் வெங்கடேஷ்ஐயர் 5-வது இடத்தில் உள்ளார். நேற்றைய ஆட்டத்தில் அவர் 9 சிக்ஸர்களை பறக்கவிட்டார். 2008-ல் பெங்களூரு அணிக்கெதிராக கொல்கத்தா வீரர் மெக்கல்லம் 13 சிக்ஸர்களை பறக்கவிட்டு முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் ஆந்த்ரே ரஸ்ஸல் (2018-ல் சென்னைக்கு எதிராக 11 சிக்ஸர்கள்) இருக்கிறார். 3-வது இடத்தில் ரஸ்ஸலே (2019-ல் பெங்களூருக்கு எதிராக 9 சிக்ஸர்கள்) உள்ளார். 4-வது இடத்தில் தினேஷ் கார்த்திக் (2019-ல் ராஜஸ்தானுக்கு எதிராக 9 சிக்ஸர்கள்) உள்ளார்.

> 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக சதமடித்தவர் என்ற பெருமையை வெங்கடேஷ் ஐயர் பெற்றார். இதற்கு முன்பு 2008-ல் பெங்களூரு அணிக்கெதிராக கொல்கத்தா வீரர் மெக்கல்லம் 158 ரன்கள் விளாசியதே முதல் சதமாக இருந்தது. நேற்றைய ஆட்டத்தில் வெங்கடேஷ் ஐயர் விளாசிய சதம், கொல்கத்தா அணிக்கான 2-வது சதமாக அமைந்தது.

> ஐபிஎல் போட்டிகளில் ஓர் அணிக்கெதிராக அதிகபட்ச ரன்களைக் குவித்தவர் என்ற பெருமையை மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். கொல்கத்தா அணிக்கெதிராக இதுவரை 1040 ரன்களைக் குவித்துள்ளார் ரோஹித். அதற்கடுத்த இடங்களில் சென்னை அணிக்கெதிராக ஷிகர் தவணும் (1029 ரன்கள்), கொல்கத்தா அணிக்கெதிராக டேவிட் வார்னரும் (1018 ரன்கள்), சென்னை அணிக்கெதிராக விராட் கோலியும் (979 ரன்கள்) உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE