IPL 2023: GT vs RR | சஞ்சு சாம்சன் - ஹெட்மேயர் அதிரடியால் 4வது வெற்றியை ருசித்த ராஜஸ்தான்

By செய்திப்பிரிவு

குஜராத்: ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுளளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 2வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் சஹா 4 ரன்னில் முதல் விக்கெட்டாக வெளியேறினார்.அடுத்து வந்தவர்களில் சாய் சுதர்சன் 20 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 28 ரன்னிலும் அவுட்டானாலும், ஷுப்மன் கில் 45 ரன்கள் எடுத்து அணிக்கு உதவினார்.

இவருக்கு அடுத்தாக அபினவ் மனோஹர் அதிரடியாக ஆடி 13 பந்தில் 3 சிக்சர் உள்பட 27 ரன்களில் அவுட்டாக, கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 30 பந்தில் 46 ரன்கள் சேர்த்து விக்கெட்டாக்கினார். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு குஜராத் அணி 177 ரன்களை சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினார்.

178 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் அணியின் முதல் விக்கெட்டாக ஜெய்ஸ்வாலை 1 ரன்னோடு நடையைக் கட்ட வைத்தார் ஹர்திக் பாண்டியா.

அடுத்த ஓவர் வீசிய ஷமி அதிரடி ஆட்டக்காரர் ஜாஸ் பட்லரை கிளீன் போல்டக்கினார். இதனால் 3 ஓவர்கள் முடிவில் 4 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய ராஜஸ்தான் அணியை கேப்டன் சஞ்சு சாம்சனும், படிக்கல்லும் இணைந்து மீட்டெடுக்க போராடினர். ஆனால் ரஷீத் கான் அந்த எண்ணத்தை நிறைவேற்றவிடவில்லை. அவர் 26 ரன்கள் எடுத்திருந்த படிக்கல்லையும், 5 ரன்களில் ரியான் பராக்கையும் பெவிலியன் திரும்ப வைத்தார்.

விக்கெட்கள் சரிந்தாலும், சஞ்சு சாம்சன் சக வீரர் ஹெட்மேயருடன் இணைந்து குஜராத் பந்துவீச்சை துவம்சம் செய்தார். தன் பங்கிற்கு 30 பந்துகளில் 6 சிக்ஸர் உதவியுடன் 60 ரன்கள் சேர்த்துவிட்டு வெளியேறினார். இறுதி ஓவர்களில் ஹெட்மேயர் சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்த ஹெட்மேயர் 5 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் எடுத்தார்.

இதனால் ராஜஸ்தான் அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்த தொடரில் ராஜஸ்தான் பெறும் 4வது வெற்றி இதுவாகும். இதுவரை ஒரேயொரு போட்டியில் மட்டுமே அந்த அணி தோல்வி கண்டுள்ளது. குஜராத் தரப்பில் ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE