IPL 2023 | தொடர்ச்சியாக 5 போட்டிகளில் டெல்லி தோல்வி: ரிக்கி பாண்டிங்கை சாடிய சேவாக்

By செய்திப்பிரிவு

டெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி இருப்பதற்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்தான் பொறுப்பு என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி அணியின் கேப்டனாக கடந்த சீசனில் செயல்பட்ட ரிஷப் பந்த், கடந்த ஆண்டு காரில் பயணித்த போது விபத்தில் சிக்கி காயமடைந்தார். அதனால் அவர் நடப்பு சீசனில் பங்கேற்கவில்லை. அவருக்கு மாற்றாக டேவிட் வார்னர் அணியை வழிநடத்தி வருகிறார். லக்னோ, குஜராத், ராஜஸ்தான், மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிராக டெல்லி அணி தோல்வியைத் தழுவி உள்ளது.

இந்த தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள வீரேந்திர சேவாக், “அணியின் தோல்விக்கு பயிற்சியாளர்தான் பொறுப்பு. ரிக்கி பாண்டிங் பயிற்சியின் கீழ் டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆண்டுதோறும் பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறுகிறது. அணி வெற்றி பெற்றால் அதற்கான பொறுப்பை அவர்தான் பெறுகிறார். தோல்வியின்போதும் அப்படித்தான்.

வெற்றி என்றால் தான் சொந்தம் கொண்டாடவும், தோல்வி என்றால் பிறர்தான் காரணம் என குறை கூறவும் இது இந்திய அணி அல்ல. ஐபிஎல் அணிகளைப் பொறுத்தவரை வீரர்களை திறம்பட மேனேஜ் செய்வது மிகவும் அவசியம். அதன் மூலம் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க முடியும். நடப்பு சீசனில் தங்களது சரிவில் இருந்து மீள்வது எப்படி என தெரியாமல் டெல்லி குழம்பி இருப்பதாக நான் கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE