சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோனி களமிறங்கிய போது மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டியவாறு அவரை வரவேற்றனர். அவர் முதல் ரன்னை சேர்த்ததும் ரசிகர்கள், ‘சிஎஸ்கே, சிஎஸ்கே’ என ஒருசேர கரவோஷம் எழுப்பினர்.
87 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாகச் சென்ற நிலையில் தோனி களம்புகுந்தார். தனது ஆசாத்தியமான திறனால் ஆஸ்திரேலிய அணியின் உத்வேகத்துக்கு தடைக்கல்லாக மாறினார். முதல் பவுண்டரி அடிக்க 67 பந்துகளை அவர் எடுத்துக் கொண்ட போதிலும் இன்னிங்ஸை அவர் கட்டமைத்த விதம் பாராட்டுக்குரியது. இதோடு மட்டுமல்லாமல் எதிர் முனையில் பாண்டியா அடித்து விளையாடவும் ஊக்கம் அளித்தார்.
பாண்டியாவுடன் 6-வது விக்கெட்டுக்கு 118 ரன்களும், புவனேஷ்வர் குமாருடன் 7-வது விக்கெட்டுக்கு 72 ரன்களும் சேர்த்தார் தோனி. இந்த இரு முக்கிய கூட்டணிகளும்தான் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தது. பாண்டியா ஆடம் ஸம்பா ஓவரை குறிவைத்து விளையாடியது போல், தோனி கடைசி கட்டத்தில் பாக்னர் ஓவரில் ரன் வேட்டையாடினார். 88 பந்துகளில் அவர் சேர்த்த 79 ரன்கள் மிகவும் மதிப்பு மிக்கது.
சேப்பாக்கம் மைதானத்தில் தோனி, இந்திய அணியை சரிவில் இருந்து மீட்பது இது 2-வது முறை. கடந்த 2012ம் ஆண்டு இதே மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்த போது தோனிதான் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார். அவர் 113 ரன்கள் சேர்த்ததால் தான் இந்திய அணியால் 224 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எடுக்க முடிந்தது. ஆனால் அன்று இந்தியாவுக்கு இதேபோன்று வெற்றிக் கொண்டாட்ட நாளாக அமையவில்லை.
மேலும் 2007-ல் சேப்பாக்கத்தில் ஆசியா லெவன் - ஆப்பிரிக்கா லெவன் ஆகிய அணிகள் மோதிய ஆட்டத்திலும் தோனி ஆபத்பாந்தவனாக செயல்பட்டுள்ளார். ஆசிய அணி 72 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்த நிலையில் தோனி 97 பந்துகளில் 139 ரன் விளாசினார். இந்த ஆட்டத்தில் ஆசிய லெவன் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பந்து வீச்சின்போது வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவதிலும், தேவையான இடத்தில் பீல்டிங் வியூகம் அமைப்பதிலும் மூத்த வீரராக தோனி பன்முகத் திறனை வெளிப்படுத்தினார். குல்தீப் யாதவ் வீசிய ஓரே ஓவரில் மேக்ஸ்வெல் 24 ரன்கள் வேட்டையாடிய நிலையில் அடுத்த ஓவரை வீசி யுவேந்திரா சாஹலின் முதல் பந்தையும் மேக்ஸ்வெல் சிக்ஸராக மாற்றினார். இந்த சமயத்தில் தோனி, பந்தை ஆப் ஸ்டெம்புக்கு வெளியே சற்று அகலமாக செல்லுமாறு வீசக் கூறினார். அவரும் திட்டத்தை சரியாக செயல்படுத்தவே எல்லைக்கோட்டுக்கு அருகே நின்ற மணீஷ் பாண்டேவிடம் பிடி கொடுத்து வெளியேறினார் மேக்ஸ்வெல்.
பேட்டிங்கிலும், கேப்டனுக்கு வெற்றிக்கான வியூகம் அமைத்து கொடுப்பதிலும் தோனியின் பங்கு அளப்பரியதாக அமைந்தது. இதை பார்த்த போது நம் கண் முன், ‘தோனியிடம் இருந்து ஆச்சர்யத்தை எதிர்பார்க்கலாம், அவர் இல்லாத ஒரு அணியை நினைத்துக்கூட பார்க்க முடியாது’ என்று இந்தத் தொடருக்கு முன்னதாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்த கருத்து தான் நினைவுக்கு வந்தன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago