IPL 2023: RCB vs DC | ஆர்சிபியின் டாப் ஆர்டர் சொதப்பல் - டெல்லிக்கு 175 ரன்கள் இலக்கு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை சேர்த்துள்ளது.

16-ஆவது ஐபிஎல் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆர்சிபியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் இணை அணிக்கு அத்தனை சிறப்பாக அமையவில்லை. 4-ஆவது ஓவரில் மிட்செல் மார்ஷ் வீசிய பந்தில் 22 ரன்களுடன் அவுட்டாகி டு பிளெசிஸ் ஏமாற்றமளித்தார். கேப்டன் கோலியும் 50 ரன்களில் கிளம்பினார். மஹிபால் லோமரோர் 2 சிக்சர்களை 26 விளாசினாலும் 26 ரன்களுடன் அவுட்டானார்.

ஹர்ஷல் படேல் 6 ரன்களுடன் வந்த வேகத்தில் நடையைக்கட்ட, க்ளென் மேக்ஸ்வெல் 3 சிக்சர்களை விளாசி நம்பிக்கையளித்த போதிலும் 24 ரன்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த தினேஷ்கார்த்திக் டக் அவுட்டானார். வீரர்கள் சோபிக்காததால் 15 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த ஆர்சிபி 134 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. அனுஞ் ராவத் 15 ரன்களையும், ஷாபாஸ் அகமது 20 ரன்களையும் சேர்க்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 174 ரன்களைச் சேர்த்தது.

டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், லலித் யாதவ் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE