ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக அஸ்வினுக்கு அபராதம் விதிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்தது. இந்தப் போட்டி முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், “மைதானத்தில் நிலவிய பனி காரணமாக அம்பயர் பந்தை தானாகவே மாற்றியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை. நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் நடப்பு ஐபிஎல் போட்டிகளில் களத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. அது நல்லதாகவும், கெட்டதாகவும் இருக்கலாம்.

குறைந்தபட்ச நடுநிலையுடன் செயல்படுவது தேவையான ஒன்று என நினைக்கிறேன். பந்து வீசும் அணியாக நாங்கள் பந்தை மாற்ற வேண்டும் என கேட்கவில்லை. ஆனால் அம்பயரின் தனிப்பட்ட முடிவின் பேரில் பந்து மாற்றப்பட்டது. இது குறித்து நான் நடுவரிடம் கேட்டதற்கு அவர், ‘நாங்கள் பந்தை மாற்றலாம்’ என்றார். ஆக, ஒவ்வொரு முறை பனியின்போதும் பந்து மாற்றப்படும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், அது ஒரு தரத்தில் இருக்க வேண்டும்” என்று வெளிப்படையாக விமர்சித்து பேசினார்.

இந்நிலையில், ஐபிஎல் நடத்தை விதியான ஆர்டிகள் 2.7-ஐ மீறியதாக கூறி அஸ்வினுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. போட்டி கட்டணத்தில் 25% தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதி 2.7-ன் கீழ் லெவல் 1 குற்றமாக அஸ்வினின் விமர்சனம் கருதப்படுவதாகவும், போட்டியின்போது நடுவரின் முடிவே இறுதியானது எனவும் ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE