“சச்சின் கிரிக்கெட்டைப் பற்றி பேசுவார்; நான் கிஷோர் குமார் பாடல்களைப் பாடுவேன்” - சேவாக் ருசிகரம்

By ஆர்.முத்துக்குமார்

தோனி அடித்த அந்த இறுதிப் போட்டி வின்னிங் சிக்சருக்காகப் புகழ்பெற்ற 2011 உலகக்கோப்பை தொடரில் சச்சின், சேவாகின் பங்களிப்பை மறக்க முடியாது. கம்பீர், யுவராஜ் சிங், வேற லெவல். அந்த உலகக் கோப்பையில் இதுவரை கேள்விப்படாத ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்றை அதிரடி பேட்டர் விரேந்திர சேவாக் அன்று ஐபிஎல் வர்ணனையின் போது கூறினார்.

2003 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இருவரும் கொடுத்த தொடக்கம் இன்றுமே பாகிஸ்தான் ரசிகர்கள், வீரர்களுக்கு முதுகுத் தண்டைச் சில்லிட வைக்கும். 2011 உலகக்கோப்பையில் மீண்டும் இவர்கள் இணைந்து தொடக்கத்தில் ஆடியது ரசிகர்களின் கண்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. இன்று ஒரு மேட்ச் ஆடினால், 4 மேட்சுக்கு ஆடாத தொடக்க வீரர்கள்தான் இந்திய அணியில் உள்ளனர். சேவாக் - சச்சின் ஓப்பனிங் என்றால் ஜெயசூரியா - கலுவிதரனா, மார்க் வாஹ்-கில்கிறிஸ்ட், மேத்யூ ஹெய்டன் - ஆடம் கில்கிறிஸ்ட் தொடக்க ஜோடியைப் போல பவுலர்களுக்கு கைகால்களில் நடுக்கம் ஏற்படவே செய்யும்.

சேவாகிற்கும் சச்சினுக்கும் களத்திலும் களத்திற்கு வெளியேயும் நல்ல உறவுமுறை இருந்தது. நல்ல நட்பு இருந்து வந்தது. இருவரும் நிறைய உரையாடியுள்ளனர். என்னதான் இருமுறை டெஸ்ட் 300 அடித்தாலும் மூன்றாவது முறை 300க்கு நெருங்கி வந்தாலும், தன் குருநாதர் சச்சின் என்றே சேவாக் இன்று வரையிலும் கூறுவார். சேவாக் அன்று ஐபிஎல் வர்ணனையில் கூறிய சம்பவம் என்னவெனில் 2011 உலகக்கோப்பையின் போது இந்தியா தோற்ற ஒரே போட்டியான தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியாகும். இந்தப் போட்டியில் சேவாக் 73 ரன்களை விளாச, சச்சின் 111 ரன்களை விளாசினார். இருவரும் சேர்ந்து 142 ரன்களை சேர்த்தனர்.

அப்போது சச்சினுக்கும் தனக்கும் நடந்த சம்பாஷணையை சேவாக் கூறும்போது, “2011 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடிய போது, நான் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தேன். சச்சின் நல்ல பேட்டிங் டச்சில் இருந்தார். ஓவர்களுக்கு இடையில் சச்சின் டெண்டுல்கர் ஏதாவது பேசுவார். பவுலர்கள், பிட்ச், என்று ஏதாவது கூறுவார். ஆனால் நான் பேசவே மாட்டேன், நான் பாட்டுப்பாடிக் கொண்டிருப்பேன்.

நான் ஏன் விளையாடும்போது பாடுவேன் என்றால் எனது கவனத்தை கிரிக்கெட் மீது மேலும் ஆழமாகச் செலுத்த பாடல்கள் உதவும். 3 ஓவர்களுக்கு அவர் பேசினார். நான் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தேன். 4வது ஓவர் முடிந்தவுடன் சச்சினால் பொறுக்க முடியாமல் என் முதுகில் தட்டி என்னிடம், ‘நீ கிஷோர் குமாரின் இந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டேயிருந்தால் எனக்கு பைத்தியமே பிடித்து விடும்’ என்று சொல்லவே சொல்லி விட்டார்.

நான் எப்படி என்றால், நன்றாக ஆடிக்கொண்டிருக்கின்றோம். அப்படியே கொண்டு போக வேண்டியதுதான் என்ற மனநிலையில் இருந்தேன். சச்சின் கிரிக்கெட் பற்றி பேசாமல் இருக்க மாட்டார். 20 ஒவர்களில் 140-150 ரன்கள் அடித்தோம். ஓவர்கள் முடிந்த பிறகு பவுலர்களின் உத்திகள் பற்றி சச்சின் பேசுவார். ஆனால் நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன்” என்றார் சேவாக். அந்தப் போட்டியில் இடைநிலை பேட்டர்கள் சொதப்ப இந்திய அணி 296 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா 2 பந்துகள் மீதம் வைத்து இலக்கை விரட்டி வெற்றி பெற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE