தமிழர்கள் இல்லாத சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் ஒலித்த குரல் பலத்த விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.
சட்டப்பேரவை பேச்சு: “தமிழகத்தில் உள்ள இளைஞர்களை அதிக அளவில் ஈர்க்கும் ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. எனவே, சிஎஸ்கே அணிக்கு தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் சிஎஸ்கே அணியில் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. பிற மாநில வீரர்களுக்கே அணியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
தமிழகம் சார்பில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணியாக சிஎஸ்கே அணி விளம்பரப்படுத்தப்பட்டு, பெரும் வர்த்தக லாபத்தை ஈட்டுகிறது. எனவே, தமிழக வீரர்கள் இல்லாத சிஎஸ்கே அணிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்" என்று தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் பேச சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்கள் பங்களிப்பு விவாதத்தை பற்ற வைத்துள்ளது.
விவாதங்கள் ஒருபுறம் இருக்க, நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழக வீரர்களின் பங்களிப்பும், தொடருக்கு தேர்வாகாத தமிழ்நாட்டு வீரர்கள் குறித்தும் பார்ப்போம்.
» IPL 2023: CSK vs RR | கடைசி பந்தில் வெற்றியை பறித்த சந்தீப் சர்மா - 3 ரன்களில் சென்னை தோல்வி
» “இத்தனை ஆண்டுகள் சர்வைவ் ஆனதில் மகிழ்ச்சி” - கேப்டனாக 200வது போட்டி குறித்து நெகிழ்ந்த தோனி
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் யாரும் இல்லை என்றாலும், வேறு சில அணிகள் தமிழக வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளன.
விஜய் சங்கர் (குஜராத் டைட்டன்ஸ்): தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் சங்கர் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டும் இதே அணிக்காக விளையாடிய இவரை ரூ.1.40 கோடி கொடுத்து குஜராத் அணி நிர்வாகம் தக்க வைத்தது. இத்தனைக்கும் கடந்த சீசன் விஜய் சங்கருக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. எனினும் ரீடெயின் செய்தது. அதற்கு பலனாக நடப்பு சீசனில் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் சரவெடியாய் வெடித்த விஜய், 24 பந்துகளில் 63 ரன்களை குவித்தார்.
சாய் சுதர்ஷன் (குஜராத் டைட்டன்ஸ்): குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு வீரர் சாய். கடந்த ஐபிஎல் தொடரில் விஜய் சங்கருக்கு மாற்றாக வந்து ஒரு சில போட்டிகளிலேயே விளையாடிய இவரையும் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு தக்க வைத்தது குஜராத் டைட்டன்ஸ். நிர்வாகத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடப்பு தொடரில் ஜொலித்து வருகிறார். சென்னைக்கு எதிராக 22 ரன்கள், டெல்லிக்கு எதிராக 62 ரன்கள், கொல்கத்தாவுக்கு 53 ரன்கள் என குஜராத்தின் புதிய அடையாளமாக உருவெடுத்து வருகிறார்.
சாய் கிஷோர் (குஜராத் டைட்டன்ஸ்): நடப்பு சீசனுக்காக குஜராத் அணியால் அதிக தொகை கொடுக்கப்படும் தமிழக வீரர் என்றால் அது சாய் கிஷோர்தான். டிஎன்பிஎல் மூலம் ஜொலித்த தங்கமாக அறியப்பட்ட இடதுகை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020ம் ஆண்டே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஏலத்தில் எடுத்ததோடு சரி. இரண்டு ஆண்டுகள் அவரை பெஞ்சில் மட்டுமே உட்கார வைத்தது. வாய்ப்பு இல்லாமல் ஏங்கிய அவரை, குஜராத் ரூ.3 கோடி கொடுத்து தட்டி தூக்க கடந்த சீசனில் 6 விக்கெட் வீழ்த்தி குஜராத் கோப்பை ஏந்த முக்கிய காரணமாக அமைந்தார். இந்த ஆண்டு களமிறங்க இன்னும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
நாராயண் ஜெகதீசன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்): 26 வயதான நாராயண் ஜெகதீசன் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். விஜய் ஹசாரே கோப்பையில் உச்சகட்ட பார்மில் இருக்கும் இவர் கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் இருந்தார். இந்த சீசனில் அவரை சிஎஸ்கே கழற்றிவிட ரூ.90 லட்சத்துக்கு கேகேஆர் அரவணைத்தது. குஜராத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய ஜெகதீசன் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
வருண் சக்ரவர்த்தி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்): 2019 முதல் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள வருண் சக்ரவர்த்தி முதல் சீசனில் இருந்து முக்கிய வீரராக அங்கம் வகித்து வருகிறார். தொடர்ந்து தோனியின் விக்கெட்டை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வருணை ரூ.8 கோடி கொடுத்து தக்கவைத்தது கேகேஆர். இந்த சீசனின் இரண்டாவது மேட்சில் ஆர்சிபியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் டு பிளசிஸ், மேக்ஸ்வெல் உட்பட 4 விக்கெட் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை கேகேஆர் ருசிக்க காரணமாக அமைந்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் (ராஜஸ்தான் ராயல்ஸ்): அறிமுகமே தேவையில்லாத அஸ்வின், ஆர்ஆர் கேப்டன் சஞ்சு சாம்சனின் துருப்புச் சீட்டு வீரர் என்றால் மிகையல்ல. ரூ.5 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட அஸ்வின் நடப்பு சீசனில் விளையாடி 4 போட்டிகளில் 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சேப்பாக்கத்தில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் 30 ரன்கள் எடுத்து ஜொலித்த அஸ்வின், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.
முருகன் அஸ்வின் (ராஜஸ்தான் ராயல்ஸ்): சிவகங்கை மண்ணின் மைந்தனான இவர், ரவி அஸ்வினை போல சுழற்பந்து வீச்சாளர். கடந்த சீசனில் மும்பையில் இருந்த முருகன் அஸ்வின் அந்த அணியால் விடுவிக்கப்பட, ராஜஸ்தான் நிர்வாகத்தால் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார். தற்போதைய சீசனில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
நடராஜன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்): தமிழ்நாடு மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட வீரர்களில் ஒருவரான நடராஜன், கடந்த சில சீசன்களாகவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தான் உள்ளார். 'சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்' என வர்ணிக்கப்படும் நடராஜனை ரூ.4 கோடிக்கு தக்க வைத்தது ஐதராபாத். காயத்தால் அவரின் ஆட்டத் திறன் கேள்விக்குள்ளான நிலையில் ராஜஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் தனக்கே உரிய யார்க்கர்களை வீசி 23 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் எடுத்து கம்பேக்கை அழுத்தமாக பதிவு செய்தார்.
வாஷிங்டன் சுந்தர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்): இவர், சன்ரைசர்ஸ் அணியில் தான் கடந்த சில சீசன்களாக இருந்து வருகிறார். ரூ.8.75 கோடி கொடுத்து தக்கவைக்கப்பட்ட பக்கா சென்னை பையனான வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் உச்சகட்ட பார்மில் இருந்த நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் 3 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
ஷாருக் கான் (பஞ்சாப் கிங்ஸ்): 2023 ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு (ரூ.9 கோடி) தக்கவைக்கப்பட்ட தமிழக வீரர் இவரே. கடந்த சீசனில் அவர் வெளிப்படுத்திய பெர்பாமென்ஸ் அப்படி. பஞ்சாப் கிங்ஸின் முக்கிய வீரர்களில் ஒருவராக இடம்பிடித்து வருகிறார். ஆல் ரவுண்டரான இவர், இந்த சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் பவுலிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. மாறாக பேட்டிங்கில் கிடைத்த வாய்ப்பில் பெரிய சம்பவங்களை எதுவும் ஷாருக் செய்யவில்லை.
தினேஷ் கார்த்திக் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ): கடந்த சீசனில் ஆர்சிபிக்கு பினிஷிங் கிங்காக வலம் வந்த தினேஷ் கார்த்திக், இதன் காரணமாக உலகக்கோப்பை இந்திய அணி வரை இடம்பெற்றார். வயது ஏறினாலும் அவரின் ஆட்டத்திறன் கொஞ்சமும் குறையவில்லை. இதனால், ரூ. 5.50 கோடிக்கு ஆர்சிபியால் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் தவிர உத்தரப்பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டு தமிழக அணியில் இடம்பெற்று விளையாடி வரும் சோனு யாதவ் (ஆர்சிபி), கேரளத்தை பூர்வீகமாக கொண்டு தமிழக அணியில் இடம்பெற்று விளையாடிவரும் சந்தீப் வாரியர் (மும்பை) ஆகியோர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர்.
அதேநேரம், தமிழக கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களான பாபா இந்திரஜித், பாபா அபரஜித் அஜித், ராம், ஹரி நிஷாந்த், எம். சித்தார்த், சஞ்சய் யாதவ், அஜிதேஷ், சுரேஷ் குமார், ராக்கி பாஸ்கர், திரிலோக் நாக், அனிருத் சீதாராம், பி. சூர்யா போன்ற பல தமிழக வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. ஒட்டுமொத்தமாக ஐபிஎல் 2023 சீசனை எடுத்துக்கொண்டால் ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்பட்ட வீரர்கள், ஏலத்தில் தேர்வான வீரர்கள் என்று மொத்தமாக 11 தமிழக வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த சீசனுடன் ஒப்பிடும்போது 3 பேர் குறைவு.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முகமாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரோகித் சர்மா, குஜராத் டைட்டன்ஸ் முகமாக அதே மாநிலத்தைச் சேர்ந்த ஹர்திக் பாண்டியா என விளங்கி வருகின்றனர். 15 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னும் ஐபிஎல் தொடரில் இன்னும் சென்னை அணியில் மட்டும் தமிழ்நாட்டு வீரர்கள் யாரும் பெரிதாக முன்னிலைப்படுத்தபடவில்லை.
அதிலும், நடப்பு சீசனுக்கான சிஎஸ்கே அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த யாருமே இல்லை. 16வது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடும் 25 வீரர்களில் 8 வெளிநாட்டு வீரர்களும், 17 இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். கடந்த சீசனில் சென்னை அணியில் இடம்பெற்று இருந்த ஜெகதீசன் மற்றும் ஹரி நிசாந்த் இருவரையும் சென்னை நிர்வாகம் தக்க வைக்க தவறியது.
கடந்த ஆண்டு கடைசியில் நடந்த மினி ஏலத்தில் ஜெகதீசனை மட்டும் தக்க வைக்க முயன்ற சிஎஸ்கே ரூ.85 லட்சம் வரை ஏலம் கேட்டது. ஆனால், ரூ.90 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவரை கடந்த இரு சீசன்களாக வாய்ப்பு கொடுக்காமல் சிஎஸ்கே உட்கார வைக்க, கேகேஆர் மூன்றாவது போட்டியிலேயே வாய்ப்பளித்தது.
ஜெகதீசனைத் தவிர தமிழ்நாட்டை சேர்ந்த வேறு எந்த வீரர்களையும் ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago