IPL 2023 | சேப்பாக்கத்தில் இன்று மோதல்: ஜாஸ் பட்லர், ஜெய்ஸ்வால் அதிரடி சிஎஸ்கேவிடம் எடுபடுமா? - முன்னோட்ட பார்வை

By பெ.மாரிமுத்து

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.

சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் சிறந்த பார்மில் உள்ள ராஜஸ்தான் அணியின் தொடக்க ஜோடியான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் ஆகியோர் கடும் சோதனைகளை எதிர்கொள்ளக்கூடும். ஏனெனில் சிஎஸ்கே அணியில் உலகத்தரம்வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த ஜோடிக்கு நெருக்கடி தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறுகிய வடிவிலான போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக உள்ள ஜாஸ் பட்லர், இளம் இந்திய பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுத்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தலா இரு அரை சதங்கள் விளாசி உள்ளனர். பட்லரின் ஸ்டிரைக் ரேட் 180.95 ஆகவும், ஜெய்ஸ்வாலின் ஸ்டிரைக் ரேட் 164.47 ஆகவும் உள்ளது. இவர்களுடன் சஞ்சு சாம்சன், சிம்ரன் ஹெட்மயர் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் பெரிய அளவில் ரன் வேட்டை நிகழ்த்தி உள்ளது. ஹைதராபாத்தில் அந்த அணிக்கு எதிராக 203 ரன்களை குவித்து 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. தொடர்ந்து சொந்த மைதானமான குவாஹாட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 198 ரன்கள் இலக்கை துரத்தி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டிருந்தது. இதே மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிராக 199 ரன்களை குவித்து 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி இருந்தது. இந்த 3 ஆட்டங்களும் முற்றிலும் மட்டை வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நடைபெற்றது.

மட்டை வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடிவிட்டு தற்போது பந்துகள் வேகம் குறைந்துவரக்கூடிய சேப்பாக்கம் ஆடுகளத்தில் விளையாட உள்ளது ராஜஸ்தான் அணி.

சேப்பாக்கம் போட்டியில் எப்போதும் டாஸ் முக்கிய பங்குவகிக்கும். ஏனெனில் இங்கு 170 முதல் 175 ரன்கள் வரையிலான இலக்கை அடைவது என்பது சவாலானதாக பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர்களான மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் கூட்டாக 10 அல்லது 12 ஓவர்களை வீசும் போது அது வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதாக அமையும். இந்த சுழற்பந்து வீச்சு கூட்டணி இதுவரை 11 விக்கெட்களை கைப்பற்றி உள்ளது. அதேவேளையில் ரன்களையும் பெரிய அளவில் தாரை வார்க்கவில்லை. மொயின் அலியின் ரன் சிக்கன விகிதம் 6.50 ஆகவும், ரவீந்திர ஜடேஜாவின் ரன் சிக்கன விகிதம் 6.88 ஆகவும், மிட்செல் சாண்ட்னரின் ரன் சிக்கன விகிதம் 6.75 ஆகவும் உள்ளது.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் உணவு நச்சுத்தன்மை காரணமாக மொயின் அலி களமிறங்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவர், களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொயின் அலி விளையாடும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்காவின் சிசன்டா மகலா நீக்கப்படுவார். ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் முழு உடற்தகுதியை எட்டாததால் அவரது இடத்தை மீண்டும் ஒருமுறை டுவைன் பிரிட்டோரியஸ் நிரப்புவார்.

ராஜஸ்தான் ராயல்ஸின் சுழற்பந்து வீச்சாளர்களையும் எந்த வகையிலும் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில் அவர்களின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான, ‘கிரிக்கெட் விஞ்ஞானி' ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த மைதானத்தில் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டையும் விளையாடியுள்ளார். மேலும் புத்திசாலித்தனமாக செயல்படக்கூடிய யுவேந்திர சாஹல், போட்டியின் நாளில் எந்த பேட்ஸ்மேனையும் வீழ்த்தும் திறன் கொண்டவர். இவர்களுடன் மற்றொரு தமிழக சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வினும் அணியில் இருப்பது கூடுதல் பலம். இந்த சுழற்பந்து வீச்சு கலவையானது சிஎஸ்கேவுக்கு அவர்களின் சொந்த மண்ணில் சவால் கொடுக்கக்கூடும்.

சிஎஸ்கே அணியில் பிரதான வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது காயம் அடைந்தார். இடது தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தில் அவர், தொடரில் இருந்து விலகும் சூழ்நிலையை எதிர்நோக்கி உள்ளார். ஏற்கெனவே பென் ஸ்டோக்ஸ் முழு உடற்தகுதியுடன் இல்லாத நிலையில் தற்போது தீபக் சாஹர் தொடரில் இருந்து வெளியேற உள்ளது சிஎஸ்கேவுக்கு பின்னடைவை கொடுக்கக்கூடும்.

வேகப்பந்து வீச்சில் அனுபவம் இல்லாத இளம் வீரர்களான ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜித் சிங் ஆகியோரை சார்ந்தே இருக்க வேண்டிய நிலைக்கு சிஎஸ்கே தள்ளப்பட்டுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரையில் டாப் ஆர்டரில் ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த பார்மில் உள்ளார். இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 189 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ள ருதுராஜ் கெய்க்வாட்டிடம் இருந்தும், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 பந்துகளில் அரை சதம் அடித்த அனுபவ வீரரான அஜிங்க்ய ரஹானேவிடம் இருந்தும் மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடத் தவறிய டேவன் கான்வே பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.

மட்டை வீச்சில் ராஜஸ்தான், சிஎஸ்கே அணிகள் சமபலத்துடன் இருப்பதாகவே கருதப்படுகிறது. ஆனால் பந்து வீச்சை பொறுத்தவரையில் ராஜஸ்தான் வலுவாக இருக்கிறது. டிரெண்ட் போல்ட், ஜேசன் ஹோல்டர், சந்தீப் சர்மா வேகக்கூட்டணி சிஎஸ்கே பேட்டிங் வரிசைக்கு சவால் தரக்கூடும். சேப்பாக்கத்தில் கடந்த 3-ம் தேதி சிஎஸ்கே - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தில் பவுன்ஸ் இருந்தது. இதனால் இரு இன்னிங்ஸிலும் கூட்டாக 422 ரன்கள் வேட்டையாடப்பட்டிருந்தன. சிஎஸ்கே 217 ரன்களை குவித்த போதிலும் 12 ரன்கள் வித்தியாசத்தில்தான் வெற்றிகாண முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்