IPL 2023: CSK vs RR | சேப்பாக்கம் மைதானத்தில் எவ்வளவு ரன்கள் குவித்தால் போதுமானதாக இருக்கும்?

By செய்திப்பிரிவு

சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளன. இதையொட்டி நடைபெற்ற பத்ரிகையாளர்கள் சந்திப்பில் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கூறியதாவது:

எந்த மைதானத்தில் விளையாடுகிறோமோ, அதற்கு தகுந்தபடி பந்து வீச்சு திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்வோம். அடிப்படை விஷயங்களான லைன் மற்றும் லென்த்தில் கவனம் செலுத்துவோம். மேலும் பீல்டிங்கிற்கு தகுந்தவாறு பந்து வீச வேண்டும். இப்போதெல்லாம் எந்தவித ஸ்கோரும் பாதுகாப்பானது இல்லை. 212 ரன்கள் (லக்னோவுக்கு பெங்களூரு அணி சேர்த்த ரன்கள்) கூட போதுமானதாக இருக்கவில்லை. பந்துவீச்சில் கட்டுப்பாடுடனும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் மைதானம், அங்கு நிலவும் சூழ்நிலையும் முக்கிய பங்கு வகிக்கும். இதனால் அவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

சென்னை அணியின் கேப்டனாக தோனி 200-வது ஆட்டத்தில் பங்கேற்கிறார். அவர், சிஎஸ்கே அணியில் மட்டும் இல்லை இந்திய அணியில் ஜாம்பவானாக இருந்துள்ளார். கடைசியாக நாங்கள் பெற்ற இரு வெற்றிகளை போன்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. வெற்றி பெறும் பட்சத்தில் அது தோனிக்கு சிறந்த பரிசாக இருக்கும்.

ராஜஸ்தான் அணி மட்டும் என்றில்லை எல்லா அணியிலும் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் உள்ளனர். நிச்சயம் அவர்களுக்கு எதிராக சிறந்த திட்டங்களுடன் களமிறங்குவோம். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நான் சிறப்பாக பந்து வீசியிருந்தேன். இது ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

லக்னோ அணிக்கு எதிராக சேப்பாக்கம் ஆடுகளம் சிறப்பாகவே இருந்தது. இரு அணிகளுமே 200 ரன்களுக்கு மேல் குவித்தோம். வழக்கமான சேப்பாக்கம் ஆடுகளமாக இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. பந்துகள் தாழ்வாகவும் வரவில்லை, திரும்பவும் இல்லை. ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ஆடுகளத்தின் தன்மை ஒரே மாதிரியாகவே இருக்கக்கூடும். எனினும் பந்துகள் சற்று தாழ்வாக வரக்கூடும்.

சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை எப்போதுமே இருக்கும். இரு அணியிலும் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் இந்த ஆட்டம் இரு அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான மோதலாக இருக்கும். இவ்வாறு ரவீந்திர ஜடேஜா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE