“என் 43 ஆண்டு கிரிக்கெட் கரியரில்...” - ரிங்கு சிங் அதிரடியை மனம் உருகி சிலாகித்த பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 13-வது லீக் போட்டியின் இறுதி ஓவரில் ஐந்து சிக்ஸர்களை பறக்கவிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றிபெற செய்தார் ரிங்கு சிங். அவரது ஆட்டம் குறித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ‘ஆஹா, ஓஹோ’ என புகழ்ந்து வரும் சூழலில், அந்த இன்னிங்ஸ் குறித்து மனம் உருகி பேசியுள்ளார் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட். அதுவும் ஆட்டத்திற்கு பிறகு அணியின் கலந்தாலோசனை கூட்டத்தில் அவர் இதனை பேசியுள்ளார்.

இந்தப் போட்டியில் 21 பந்துகளில் 48 ரன்களை சேர்த்திருந்தார் ரிங்கு. இதில் 1 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். 19 ஓவர்கள் முடிவில் 16 பந்துகளுக்கு 18 ரன்கள் மட்டுமே அவர் எடுத்திருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கடைசி ஓவரில் எட்டப்பட்ட அதிகபட்ச இலக்காகவும் இது அமைந்தது. கடைசி 6 பந்துகளில் கொல்கத்தா வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. கொல்கத்தா அணி 31 ரன்கள் எடுத்தது.

“என்னுடைய 43 ஆண்டு கால கிரிக்கெட் கரியரில் பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் விளையாடிய காலங்களையும் சேர்த்து இதற்கு முன்னர் இரண்டு அபார இன்னிங்ஸ்களை இது போல நான் பார்த்துள்ளேன். ரஞ்சிக் கோப்பையில் ரவி சாஸ்திரி ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை பதிவு செய்தது அதில் ஒன்று. மற்றொன்று துபாயில் கடைசி பந்தில் சிக்ஸர்களை பறக்கவிடும் ஜாவேத் மியாண்டட் ஆட்டமும்தான். அதன்பிறகு அந்த வரிசையில் உனது இன்னிங்ஸை பார்க்கிறேன். அதேபோல கடைசி ஓவரில் அந்த ஒரு ரன்னை எடுத்த உமேஷ். வெங்கடேஷ் ஐயர் மற்றும் நித்திஷ் ராணாவின் ஆட்டமும் சிறப்பு” என சந்திரகாந்த் பண்டிட் சொல்கிறார். இந்த வீடியோவை கொல்கத்தா அணி நிர்வாகம் பகிர்ந்துள்ளது. இதை அவர் சொல்லும் போது ஆனந்தக் கண்ணீர் மல்க பேசுவதையும் பார்க்க முடிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE