IPL 2023 | சிஎஸ்கே - மும்பை இன்று பலப்பரீட்சை

By செய்திப்பிரிவு

மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் மோதுகிறது.

மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. ஒருவார இடைவேளைக்கு பின்னர் தனது சொந்த மைதானமான வான்கடேவில் இன்று சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. இந்த சீசனில் சொந்த மைதானத்தில் மும்பை அணிக்கு இது முதல் ஆட்டம் என்பதால் அந்த அணி வெற்றி கணக்கை தொடங்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

முதல் ஆட்டத்தில் மும்பை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறினர். திலக் வர்மா போராடி சேர்த்த 84 ரன்கள் மற்றும் அவருக்கு உறுதுணையாக விளையாடி 13 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்த நேஹால் வதேரா ஆகியோரின் பொறுப்பான மட்டை வீச்சால் மட்டுமே மும்பை அணி 171 ரன்களை எட்டியிருந்தது.

ஆனால் இந்த இலக்கை பெங்களூரு அணியின் டு பிளெஸ்ஸி, விராட் கோலியின் அதிரடியால் 22 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டது. மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கடந்த சீசனில் பெரிய அளவிலான செயல் திறனை வெளிப்படுத்தவில்லை.

தற்போதைய சீசனில் முதல் ஆட்டமும், அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. இதனால் நெருக்கடியுடன் களமிறங்கும் அவர், அனுபவம் இல்லாத சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சை சரியாக பயன்படுத்திக்கொள்வதில் முனைப்புக்காட்டக்கூடும். இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன் ஆகியோரும் பொறுப்பை உணர்ந்து மட்டையை சுழற்றினால் சிஎஸ்கே அணிக்கு சவால் கொடுக்கலாம். இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக ரிலே மெரிடித், சந்தீப் வாரியர் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சரை உள்ளிடக்கிய மும்பை அணியின் பந்துவீச்சு குழு எந்த ஒரு கட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த தவறி இருந்தது.

சிஎஸ்கே முதல் ஆட்டத்தில் குஜராத் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. ஆனால் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே 217 ரன்களை குவித்த போதிலும் அனுபவம் இல்லாத வேகப்பந்து வீச்சால் போராடியே வெற்றியை வசப்படுத்தியது. ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் அதிக அளவில் வைடு, நோபால்கள் வீசுவது அணிக்கு அழுத்தத்தை
கொடுப்பதாக உள்ளது.

கூடுதலாக பந்துகளை வீச வேண்டியது உள்ளதால் பந்து வீசுவதற்கான நேரம் அதிகரிக்கிறது. சிஎஸ்கே 2 போட்டிகளிலும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டுள்ளதால் கேப்டன் தோனிக்கு நெருக்கடி உருவாகி உள்ளது. ஏனெனில் விதிமுறைகளின்படி இன்னும் ஒரு ஆட்டத்தில் சிஎஸ்கே அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் கேப்டன் என்ற முறையில் தோனிக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடைவிதிக்கப்படும். லக்னோ போட்டிக்கு பின்னர் கேப்டன் தோனி இதை சுட்டிகாட்டி பந்து வீச்சாளர்களை எச்சரிக்கை செய்திருந்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் கவனமுடன் செயல்படக்கூடும்.

லக்னோ அணிக்கு எதிராக 4 விக்கெட்கள் வீழ்த்திய மொயின் அலியிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும். பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மகலா சிசண்டா இன்றைய ஆட்டத்தில் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. சிசண்டா அகலமான யார்க்கர்களை வீசுவதில் சிறப்பாக செயல்படக்கூடியவர். சிசண்டாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் சாண்ட்னர் வெளியே அமரவைக்கப்படுவார்.

பேட்டிங்கில் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே சிறந்த பார்மில் உள்ளனர். இரு ஆட்டங்களிலும் அரை சதம் அடித்துள்ள ருதுராஜ் கெய்க்வாட், மும்பை பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். நடுவரிசை வீரர்களான ஷிவம் துபே, அம்பதி ராயுடு, மொயின் அலி ஆகியோரும் பார்முக்கு திரும்பி உள்ளதும், தோனி இறுதிக்கட்டத்தில் மட்டையை சுழற்றுவதும் அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. அதேவேளையில் இரு ஆட்டங்களிலும் மட்டை வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தாத பென் ஸ்டோக்ஸ் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

35-வது முறையாக... : ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை, சிஎஸ்கே அணிகள் 34 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 20 ஆட்டங்களில் மும்பை வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கே 14 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. தற்போது 35-வது முறையாக இரு அணிகளும் மோதிக்கொள்ள உள்ளன.

ராஜஸ்தான் - டெல்லி: ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி மோதிய இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அதேவேளையில் ராஜஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் 72 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வென்ற நிலையில் அடுத்த ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வி கண்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE