“என் குருநாதரே சேவாக் தான்!” - ஷர்துல் தாக்கூர் நெகிழ்ச்சி

By ஆர்.முத்துக்குமார்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நேற்று ஆகச் சிறந்த தன் இன்னிங்ஸை ஆடி 89/5-லிருந்து 204 ரன்கள் குவிக்க உதவிய ஷர்துல் தாக்கூர் தனது ‘இந்தத் தாக்குதல் ஆட்டத்தின் குருநாதர் விரேந்திர சேவாக்தான்’ என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில், தென் ஆப்பிரிக்காவில், இங்கிலாந்தில் ஓரளவுக்கு தன் பேட்டிங் திறமையைக் காட்டியவர்தான் ஷர்துல் தாக்கூர். அதுவும் ஆஸ்திரேலியாவில் கமின்ஸை எதிர்கொண்ட முதல் பந்தையே ஹூக் ஷாட்டில் ஸ்கொயர் லெக் பவுண்டரிக்கு சிக்சராக அனுப்பி அசத்தியதோடு, அந்த இன்னிங்ஸ் முழுதும் அடித்த பவுண்டரிகள் விரேந்திர சேவாக்கை நினைவூட்டியதாக இயன் சாப்பலே கூட கூறியது நினைவில் உள்ளது.

எப்படி அஸ்வின் நன்றாக பேட் செய்தால் அவரது பேட்டிங்கில் ஒரு விவிஎஸ் லஷ்மண் சாயல் தெரியுமோ, அதே போல் ஷர்துல் அடிக்கும் போது சேவாக்கின் சாயல் தெரிகின்றது. இவரது பேட்டிங்கினாலும் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், சுயாஷ் போன்றோரின் சுழலிலும், சிக்கி ஆர்சிபி அணி 123 ரன்களில் சுருண்டு 81 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி கண்டது.

ஷர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 68 ரன்களை 9 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் விளாச பந்து வீச்சிலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். இந்நிலையில் தன் குருநாதர் விரேந்திர சேவாக்தான் என்பதை வெளிப்படையாகவே கூறிவிட்டார் ஷர்துல்.

“நான் அடிக்கும் பெரிய ஷாட்கள் அனைத்தையும் விரேந்திர சேவாக்கிடமிருந்துதான் கற்றுத் தேர்ந்தேன். அவர் தான் என் குரு. சேவாக் போல வருமா, அவரைப் போல் வேகப்பந்து வீச்சாளர்களை யார் பொளந்து கட்ட முடியும்? எங்கிருந்து எனது இந்த இன்னிங்ஸ் வந்தது என்று தெரியவில்லை. நான் இறங்கிய போது அணி 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஆனால் என் உள்ளுணர்வு என்னை ஆட்சி செலுத்தியது. ஆனால் உயர்மட்டத்தில் திறமைகளும் இதனுடன் இருந்தால்தான் பரிமளிக்க முடியும். அனைத்திற்கும் மேலாக நாங்கள் வலைப்பயிற்சியில் கடுமையாகவே பயிற்சி செய்து வருகின்றோம். பயிற்சியாளர்கள் த்ரோ செய்து பயிற்சி அளிக்கின்றனர். அதன் மூலம்தான் பலவிதமாக பந்துகளை அடித்துப் பழகுகிறோம். இங்கு பிட்ச்கள் எப்போதும் பேட்டிங்குக்குச் சாதகமே. இது ஒரு துல்லியமான நாளாக எனக்கும் அணிக்கும் அமைந்தது” என்றார் ஷர்துல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE