தாக்கூர் மாதிரி கூட ஆடலையே... இதுதான்டா ஆர்சிபி! - டுபிளெசிஸின் வேடிக்கை கேப்டன்சி

By ஆர்.முத்துக்குமார்

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2023 தொடரின் 9-ம் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மீண்டெழுந்து ஆர்சிபியை வீழ்த்தி, ஆர்சிபியை அதன் அசலான ‘ஃபார்முக்கு’ கொண்டு வந்தது. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸுக்கு அடுத்து நாங்கதான் என்று மார்தட்டினார் அன்று விராட் கோலி. ஆனால், அதே சிஎஸ்கேவுக்கு ஒரு சீசன் சொதப்பலாக முடிய மும்பை இந்தியன்ஸுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்கள் சொதப்பலாக முடிய ஆர்சிபி பல முறை சொதப்பிய அணியாகவே திகழ்கின்றது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் அய்யர், மந்தீப் சிங், கேப்டன் ராணா, ரஸல், சுனில் நரைன் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்ட, ஆப்கான் அதிரடி தொடக்க வீரர் குர்பாஸ் 38 பந்துகளில் அரைசதம் கண்டதோடு கொல்கத்தா அணி முதல் 10 ஒவர்களில் 79 ரன்கள் எடுக்க உதவினார். ஆனால் 3 விக்கெட்டுகள் விழுந்து விட்டன. ரஹமதுல்லா குர்பாசும், ரசலும் அடுத்தடுத்த கரன் சர்மா பந்தில் வெளியேற, ஷர்துல் தாக்கூர் இறங்கிய போது 89/5 என்று 12ஆவது ஓவரில் இருந்தது கொல்கத்தா. ஷர்துல் தாக்கூர், கரன் சர்மாவின் ஹாட்ரிக் விக்கெட்டாகியிருப்பார். கரன் சர்மாவின் அந்த பந்தை அவர் புரிந்து கொள்ளவே இல்லை. அதிர்ஷ்ட பவுண்டரி நேற்றைய தினத்தை ஷர்துல் தாக்கூர் தினமாக்கியது.

ஆனால், அதன் பிறகு ஷர்துல் தாக்கூரையே எடுக்க முடியாத ஒரு பந்து வீச்சு களவியூகத்தை ஆர்சிபியினால்தான் அமைக்க முடியும். டுபிளெசிஸ் சிறந்த கேப்டன் தான். ஆனால் சேருவார் தோஷம் போல் ஆர்சிபியில் சேர்ந்தால் அவரது கேப்டன்சியும் காலியாகி விடும் போலிருக்கின்றது. லாங் ஆஃப் இல்லாமலேயே அவர் ஷர்துலுக்கு வீசினார். பவுலர்களும் ஃபுல் டாஸ், ஸ்லாட் பால் என்று வரிசையாகப் போட்டுக்கொடுத்தனர். 20 பந்துகளில் ஐபிஎல் அரைசதம் கண்ட 5வது வீரர் ஷர்துல் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அவர் பிரமாதமாக ஆடினார். ஷாட் ஒவ்வொன்றும் ஆணித்தரமானது. 28 பந்துகளில் 69 ரன்களை விளாசினார் ஷர்துல்.

அவருடன் இடது கை வீரர் ரிங்கு சிங் தேமேயென்றுதான் முதலில் ஆடினார். ஆனால் அவருக்கென்றே வந்து சேர்ந்தார் ஹர்ஷல் படேல். இவரை ஒரு சர்வதேச தர பவுலர் என்று இந்திய அணியில் வேறு தேர்வு செய்தனர். மாறி மாறி புல்டாஸாக வீசி செம சாத்து வாங்கி 3 ஓவர்களில் வெறும் 5 டாட்பால்களே வீசி 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களை வாரி வழங்கி ஒரே ஓவரில் 20க்கும் கூடுதலாக ரன்களைக் கொடுத்து தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டார். ஷாபாஸ் அகமது ஒரு ஓவர்தான் வீசினார். கரன் சர்மா 3 ஓவர் 26 ரன் 2 விக்கெட் என்ற போதிலும் 4வது ஓவர் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. டுபிளெஸிசுக்கு வயதாகி விட்டதா என்று தெரியவில்லை. கோலியாவது சொல்லியிருக்கலாமே. கடைசி 51 பந்துகளில் 115 ரன்களை கொடுத்தது ஆர்சிபி, இதனால் 89/5லிருந்து 204 ரன்களைக் குவித்தது கொல்கத்தா.

சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, புதிய புதிர் பவுலர் சுயாஷ் சர்மாவிடம் மடிந்த ஆர்சிபி: டுபிளெசிஸ், விராட் கோலி தன்னம்பிக்கையுடன் ஆக்ரோஷமாக ஆரம்பித்தனர். புதிய பந்தில் டிம் சவுதீ நேர் நேர் தேமாவாக வீசி ஒரே ஓவரில் 23 ரன்களை ‘நான் எந்த துன்பம் வந்தாலும் சிரிச்சுப் பழகினவண்டா’ என்ற ரீதியில் சிரித்துக் கொண்டே வழங்கினார். அப்போதே புதிய பந்திலேயே நரைனைக் கொண்டு வந்திருந்தால் கோலி 21 ரன்களெடுப்பதற்கு முன்னமேயே காலியாகியிருப்பார். கோலிக்கு இப்போதெல்லாம் நல்ல ஸ்பின் பந்து வீச்சை ஆடவருவதில்லை. தப்பும் தவறுமாக ஆடி அடிக்கடி பவுல்டு, கேட்ச் என்று வெளியேறி விடுகின்றார்.

நரைன் 5வது ஓவரில் கொண்டு வரப்பட்டார். 5வது பந்து ஒரு அருமையான ஆஃப் ஸ்பின் பந்தாக அமைய விராட் கோலி அது இன்னொரு நேர் நேர் தேமா பந்து என்று நினைத்து பிளிக் ஆடப்போய் பந்து மட்டை-கால்காப்பு இடையில் புகுந்து ஸ்டம்பை தொந்தரவு செய்தது. கோலி ஆடிய ஸ்ட்ரோக் அராஜகமானது. அப்படி ஆடக்கூடிய பந்து அல்ல அது. உண்மையில் அது ஒரு பொறி. லெக் திசையில் மிட் விக்கெட்டைக் காலியாக வைத்து ஆஃப் ஸ்டம்பில் வீசினால் அவர் அந்த இடத்தில் அடிக்கப் போய் அக்ராஸ் த லைன் ஆடுவார் என்று செட் - அப் செய்யப்பட்டது. அந்தப் பொறியில் சிக்கினார் கோலி.

அடுத்த வருண் சக்ரவர்த்தி ஓவரில் கேரம் பந்தில் டுபிளெசிஸ் மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு முடிந்தார். கிளென் மேக்ஸ்வெல் வருண் சக்ரவர்த்தி ஒரு பந்தை தன் பின்கையில் பிடித்து வெளியேற்ற பிட்ச் ஆகி திரும்ப மேக்ஸ்வெல் அசிங்கமாக அதை சுழற்ற பவுல்டு ஆகி வெளியேறினார். அனைத்தையும் விட வேடிக்கை என்னவெனில் மைக்கேல் பிரேஸ்வெலை 3ம் நிலையிலும் இவருக்கு அடுத்து ஹர்ஷல் படேலை இறக்கியதுதான்.

என்ன ஆச்சு டுபிளெசிஸ்? என்று கேட்டால் இது ஆர்சிபி-ப்பா என்றுதான் கூற முடியும். ஹர்ஷலையும் வருண் பவுல்டு செய்ய, ஷாபாஸ் அகமதுவை சுனில் நரைன் வெளியேற்றினார். பிரேஸ்வில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் தாக்குரிடம் சிக்கி வெளியேற, தினேஷ் கார்த்திக் (9), அனுஜ் ராவத் (1), கரன் சர்மா (1) ஆகிய்யோரை புதிய புதிர் ஸ்பின்னர் சுயாஷ் ஷர்மா காலி செய்தார். டேவிட் வில்லே மட்டும் ஒரு முனையில் 20 நாட் அவுட். இவருக்கு முன்னால் ஹர்ஷல் படேலை இறக்கிய மாயம் என்னவோ? இதற்கு ஒரே பதில்தான் உண்டு, இது ஆர்சிபி-டா! ஆகாஷ் தீப் 8 பந்தில் 17 ரன்கள் எடுத்தார்.

வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரை ஒரு உலகக்கோப்பை சொதப்பலை முன் வைத்து சுத்தமாக கழற்றியே விட்டனர் இந்திய தேர்வுக்குழுவினர். ஒருவர் அதன் பிறகு முன்னேற வாய்ப்பேயில்லை என்று செலக்டர்கள் முடிவு கட்டி விடுவார்கள் போலிருக்கின்றது. ஆனால் வருண் சக்ரவர்த்தியிடம் கடும் முன்னேற்றம் தெரிகின்றது. ஜடேஜா, அக்சர் படேலை விட்டு விலகி நின்று பார்த்தால்தான் கரன் சர்மா, வருண் சக்ரவர்த்தி போன்றோர் கண்களுக்குத் தெரிவார்கள். ஆனால், என்ன செய்வது ஜடேஜா சிஎஸ்கே புராடக்ட், வர்த்தகம்தானே தேர்வைத் தீர்மானிக்கின்றது. எது எப்படியோ ஆர்சிபிக்கு அதன் பயங்கர சொப்பன ஐபிஎல்களை நினைவூட்டிய தோல்வியை கொல்கத்தா பரிசாக அளித்துள்ளனர். இதிலிருந்து மீண்டு வெற்றி பாதைக்கு ஆர்சிபி திரும்புவது கடினம்தான் என்று கூறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்