தோனியின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காக அன்று ஆடிக்கொண்டிருந்த ஷிவம் துபேயை ‘டேய் அவுட் ஆகுடா’ என்று கத்திக் கூச்சலிட்டது ஆளுமை வழிபாடு, நாயக வழிபாட்டின் ஒரு வடிவம் என்றால், அதையும் தாண்டி ‘புனிதமானது’ தோனியின் உருவம் தொலைக்காட்சியில் தோன்றியபோது ரசிகர் ஒருவர்... இல்லை இல்லை... பக்தர் ஒருவர் அவருக்கு தீபாராதனை காட்டியது என்று கூறலாம்.
தெய்வங்களுக்கு ஈடாக கிரிக்கெட் ஹீரோக்களை வழிபடும் போக்கு இந்திய மரபில் புதிதல்ல, நடிகர்கள், நடிகைகளுக்கு விக்கிரக ஆராதனை செய்வது, நடிகர்களின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, தலைவா என்று சாமி வந்தது போல் அரை மயக்க பரவச நிலையில் கத்திக் கும்மாளமிடுவது என்பது விளையாட்டும் விளையாட்டின் ஆளுமைகளும் சாதாரண மனிதர்களை ஒரு மாஸ் ஹிஸ்டீரியாவுக்குள் தள்ளுகின்றனர் என்றே கூற வேண்டும்.
தோனியின் மீதான மாஸ் அவரது கிரிக்கெட் மற்றும் உருவத்தினால் இயற்கையாக வந்தது ஒரு காலம் என்றால், ஐபிஎல் வந்த பிறகு பல மார்க்கெட்டிங் பிரிவுகள் தோனி என்ற உருவத்தை ஒரு வர்த்தக வணிக முத்திரையாக்கிப் பயன்படுத்தி வரும் இப்போதைய காலக்கட்டம் அவருக்கு செயற்கையாக ஒரு மாஸ் அப்பீலை உருவாக்கியுள்ளது.
» சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் மரணம்
» “கலாஷேத்ரா விவகாரத்தில் மாணவிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்” - நடிகை அபிராமி
ஒரு கட்டத்தில் சிஎஸ்கேவுக்கு ஆடும், ஆடிய எந்த ஒரு வீரரும் தான் இந்த ஷாட்டை ஆடியது தோனி கூறித்தான், நான் அந்த ரன் ஓடியது தோனி கூறித்தான், ஒரு ஆஃப் ஸ்பின்னர் தான் பந்தை அந்தவிதமாகத் திருப்பியது தோனியினால்தான், பேட்டர்கள் ஒரு வின்னிங் ஷாட் அடித்தால் அந்தப் பெருமையும் தோனிக்கே போய் சேருமாறு மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட் தோனியின் ஒரு வணிக அங்கமாகவே செயல்பட்டது, இது அவர் சர்வதேச கிரிக்கெட் ஆடிய காலத்திலும் உண்டு. ஆனால் 2008-ல் ஐபிஎல் முதன் முதலாக ஆரம்பமான பிறகே வீரர்களை வணிக முத்திரைகளாகப் பிரச்சார பீரங்கிகள் மூலம் மட்டுமல்லாது ஊடகங்கள் உட்பட பல் ஆதாரங்களையும் பயன்படுத்தி அவரை அவரது திறமைகளைத் தாண்டிய வரம்பு மீறிய ஒரு கட்டற்ற அகண்ட ஆளுமையாகக் கட்டமைத்தது. விமர்சனப் பத்திரிகாவாதம் இறந்து போய்க்கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில்தான் இந்தப் புதிய கிரிக்கெட் கடவுளர்களான சச்சின், தோனி, கோலி, ரோஹித் போன்றோர் உருப்பெற்றனர்.
இன்னொரு புறம் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்களில் வர்ணனையாளர்கள் உட்பட தோனி புகழ் பாடுவதும் அவரைப்பற்றி சிறப்பு கவன ஈர்ப்பு செய்வதும் இன்னும் சில வேளைகளில் கொச்சையாகவும் அவர் புகழ்பாடுவதையும் தொடர்ந்து செய்து வருகின்றனர். வர்ணனையாளர்கள் குறிப்பாக தமிழில் தோனி பற்றிய பிரச்சார பீரங்கிகளாகவும் தோனியின் நடை உடை பாவனைப் பொருட்களின் விளம்பரதாரர்களாகவும் ஆகியுள்ளதும் இத்தகைய ஆளுமை வழிபாட்டினுள் இளம் கிரிக்கெட் ரசிகர்களை சிக்கவைக்கின்றது. கண்டா வரச்சொல்லுங்க, ‘அவர கண்டா வரச்சொல்லுங்க’ என்ற ரேஞ்சுக்கு வர்னணையாளர்கள் ஒரு குறிப்பிட்ட வீரரின் அல்லது வீரர்களின் மார்க்கெட்டிங் பிரதிநிதிகளாக ஆவது இப்போதைய எதிர்மறை வளர்ச்சி, மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்.
தோனி ஒரு காலக்கட்டத்தில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் கடைசி 10-15 ஓவர்கள் இருக்கும் போதுதான் இறங்குவார். வந்து சடுதியில் ஆட்டமிழந்து விட்டால், ‘அவர் நின்றிருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்’ என்றும் ஒருவேளை அவர் கடைசி வரை நின்று இந்தியா தோற்றால், ‘அவர் என்ன செய்வார் தன்னால் முடிந்ததை முயன்றார்’ என்றும் சமூக ஊடகங்களிலும் சில மைய நீரோட்ட ஊடகங்களுமே முட்டுக்கொடுத்ததை கூர்ந்த, தேர்ந்த வாசகர்கள் நன்றாகவே அறிவார்கள். இவை எல்லாமுமே அவர் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் என்ற ஒரு பிம்பத்தை கட்டமைப்பது தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. இது அவருடைய வர்த்தகப் பின்னணியினால் உருவாக்கப்பட்டதே.
இப்போது, சென்னையில் அன்று தோனி டிவியில் தோன்றியவுடன் தீபாராதனை காட்டி வழிபடுகின்றார் ஒரு நபர். இத்தகைய மனோநிலை வழிபடப்படுபவரின் உண்மையான இயல்புகள் திறமைகள் மீது எழுவதல்ல, அவரைப் பற்றி ஊடகங்களால் எழுப்பப்படும் பிம்பங்கள் மூலம் உருவாவதாகும்.
கிரிக்கெட் ஒரு சாதாரண விளையாட்டு, அதை திடீரென ஒரு கிராக்கியும் பிரபல்யமும் சில காலமாக பீடித்துள்ளன. நாயக வழிபாடு அல்லது ஹீரோ ஒர்ஷிப் அபாயகரமானது. ஒருவரை விழுங்கி விடக்கூடியது ஹீரோ ஒர்ஷிப். ஹீரோக்களை வைத்துக் கொள்வதில் தவறில்லை ஆனால் அவர்களை கடவுளர்களாக வழிபடுவது ஒரு நோய்க்கூறு மனநிலையே. பழைய காலத்தில் உடல் வலுவான போர் வீரர்களை ஹீரோவாக வழிபடுவதுண்டு, இது பல தொன்மங்களின் மூலம் நமக்கு தெரியவருகின்றது, நவீன காலக்கட்டங்களில் அற/நீதியை நிலைநாட்டுபவர்கள் ஹீரோக்களாகக் கொண்டாடப்பட்டனர்.
ஹிட்லரும் ஹீரோவாகக் கொண்டாடப்பட்டார், காந்தியும் ஹீரோவாகக் கொண்டாடப்பட்டார். அந்தந்த கலாச்சாரங்களில் ஒரு குறிப்பிட்ட காலக்கட்ட மனநிலைகள் புற எதார்த்தங்களின் நெருக்கடிகளுக்கு ஒரு கற்பனாவாத தீர்வு காண ஹீரோக்களை உருவாக்கி வணங்கினர். ஆனால் இன்றைய காலக்கட்ட ஹீரோக்கள் குறிப்பாக விளையாட்டு, சினிமாத் துறை சார்ந்த ஹீரோக்களை வழிபடுவது என்பது ஒருவரின் நிழல்சுயமாக வெற்று பதிலீடாக முடிந்து, தன் சொந்த சுயத்தையே இழக்கும் நிலைக்குக் கொண்டு செல்லும் அபாயம் உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago