சென்னை: நோ-பால், வைடுகள் அணியை மோசமாக பாதிக்கின்றன, சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர்கள் இதுபோன்று செயல்பட்டால் அவர்கள் வேறு கேப்டனுக்கு கீழ் விளையாட தயாராக இருக்க வேண்டியதுதான், நான் வெளியேறிவிடுவேன், இது எனது 2-வது எச்சரிக்கை என கேப்டன் தோனி வேதனைபட தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் இதுவரை சிஎஸ்கே அணி விளையாடிய இரு ஆட்டங்களிலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய நோ-பால்கள் மற்றும் வைடுகளால் கேப்டன் தோனி மகிழ்ச்சி அடையவில்லை. நேற்று முன்தினம் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே விளையாடியது.
இந்த ஆட்டத்தில் 218 ரன்களை இலக்காக சிஎஸ்கே நிர்ணயித்த போதிலும் கடைசி வரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இதற்கு காரணம் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் உதிரிகள் வழியாக அதிக ரன்களை வழங்கியதுதான். அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் 13 வைடுகள், 3 நோ-பால்களை வீசினர். அதிலும் இவை இறுதிக்கட்ட ஓவர்களில் நிகழ்ந்தன.
அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான தீபக் ஷாகர் 5 வைடுகளை வீசினார். இதில் 3 வைடுகளை 17-வது ஓவரின் போது வீசியிருந்தார். அதேவேளையில் குஜராத் அணிக்கு எதிராக சிஎஸ்கே தோல்வி அடைந்த முதல் ஆட்டத்தில் தீபக் ஷாகர், உதிரிகள் வாயிலாக எந்த ஒரு ரன்னையும் விட்டுக்கொடுக்கவில்லை. குறைந்த அனுபவம் கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களான துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோர் உதிரிகளால் தொடர்ச்சியாக கூடுதல் பந்துகளை வீசினர்.
தேஷ்பாண்டே இரு ஆட்டங்களிலும் கூட்டாக 5 வைடுகள், 2 நோ-பால்களை வீசியுள்ளார். ஹங்கர்கேகர் 6 வைடுகள், ஒரு நோ-பால் வீசியுள்ளார். இவர்கள் வீசிய நோ-பால்களில் கிடைத்த ‘ஃப்ரீ ஹிட்டால்’ எதிரணியினர் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசி உள்ளனர்.
சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பட்டால் கேப்டன் தோனி வருத்தம் அடைந்தார். லக்னோ அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் தோனி கூறியதாவது:
உதிரிகளால் நாங்கள் கூடுதல் பந்துகளை அதிகம் வீசுகிறோம். இது தொடர்ந்தால் எங்களது பந்து வீச்சாளர்கள் புதிய கேப்டனின் தலைமையின் கீழ் விளையாட தயாராக இருக்க வேண்டும். வேகப்பந்து வீச்சு துறை சற்று மேம்படுத்தப்பட வேண்டும். வேகப்பந்து வீச்சாளர்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பந்து வீச வேண்டும். தட்டையான ஆடுகளமாக இருந்தாலும் பீல்டர்கள் இருக்கும் இடத்தை நோக்கி பேட்ஸ்மேன்கள் பந்தை அடிக்கும் வகையில் பந்து வீச முயற்சிக்க வேண்டும்.
குறிப்பாக முக்கியமானது என்னவென்றால், நாங்கள் பேட்டிங் செய்யும் போது அதை உன்னிப்பாக எங்களது பந்து வீச்சாளர்கள் பார்க்க வேண்டும். எதிரணியின் பந்து வீச்சாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். இதன் மூலம் நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கான யோசனை கிடைக்கும். நம்மிடம் இருக்கும் பலம் அல்லது வேகத்தை பொறுத்து நமது திட்டம் என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
இன்னொரு விஷயம் என்னவென்றால் அவர்கள், நோ-பால்கள், மற்றும் குறைவான வைடுகளை வீசவேண்டும். ஏனென்றால் நாங்கள் அதிகப்படியான கூடுதல் பந்துகளை வீசுகிறோம். நோ-பால், வைடுகளை குறைவாக வீசாவிட்டால் அவர்கள் ஒரு கட்டத்தில் புதிய கேப்டனின் கீழ் விளையாட தயாராக இருக்க வேண்டும். நான் வெளியேறிவிடுவேன். இது எனது 2-வது எச்சரிக்கை. இவ்வாறு தோனி கூறினார்.
சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி இருந்தது?
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் வழக்கமாக மந்தமாகவும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும். டி20 போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் குவிக்கும் ஆடுகளமாக இருந்தது இல்லை. ஆனால் நேற்று முன்தினம் சிஎஸ்கே - லக்னோ அணிகள் மோதிய ஆட்டத்தில் கூட்டாக 422 ரன்கள் வேட்டையாடப்பட்டன.
ஆடுகளத்தின் தன்மை குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறும்போது, “அதிக ரன்கள் குவிக்கப்பட்ட ஆட்டமாக இது அமைந்தது. நாங்கள் எல்லோரும் ஆடுகளம் எப்படி இருக்கும் என யோசித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கே ஆடுகளத்தின் மீது சந்தேகம் இருந்தது. 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு பிறகு மைதானத்தின் அனைத்து பகுதியிலும் நிரம்பி இருந்த ரசிகர்கள் முன்னிலையில் நாங்கள் விளையாடிய முதல் ஆட்டம் ஒட்டுமொத்தமாக சிறப்பாகவே இருந்தது. ஆடுகளம் மந்தமாகவே இருக்கும் என நினைத்தேன். அதேவேளையில் ரன்கள் சேர்க்கக்கூடிய ஆடுகளம்தான். அடுத்த 6 ஆட்டங்களில் ஆடுகளம் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். இங்கு ரன்கள் குவிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago