IPL 2023: CSK vs LSG | ருதுராஜ், கான்வே காம்போ அதிரடி - லக்னோவுக்கு 218 ரன்கள் இலக்கு

By செய்திப்பிரிவு

சென்னை: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 217 ரன்களை குவித்துள்ளது.

16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைப்பெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் 6-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே சிறப்பாக தொடக்கம் கொடுத்தது. இருவரும் இணைந்து லக்னோவின் பந்துவீச்சை சிதறடித்தனர். குறிப்பாக ருதுராஜ் மிரட்டலில் சென்னை அணி பவர் ப்ளே முடிவில் 79 ரன்களைச் சேர்த்தது.

31 பந்துகளில் 57 ரன்களைச் சேர்த்த ருதுராஜை ரவி பிஷ்னோய் அவுட்டாக்கினார். அவர் போன வேகத்திலேயே அடுத்த ஓவரில் 29 பந்துகளில் 47 ரன்களை சேர்த்த கான்வேவும் கிளம்பினார். இதனால் 11 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 120 ரன்களை சேர்த்தது.

அடுத்து வந்த ஷிவம் தூபே 3 சிக்ஸ்களை அடித்து அதிரடி காட்டினாலும் நிலைக்காமல் 27 ரன்களுடன் நடையக்கட்டினார். அடுத்து மொயின் அலி 19 ரன்களிலும், பென்ஸ்டோக்ஸ் 8 ரன்களிலும், விக்கெட்டாக சிஎஸ்கேவிடம் தொடக்கத்திலிருந்த வேகம் குறையத்தொடங்கியது. அம்பதி ராயுடு கடைசி கட்ட ஓவர்களில் சிக்ஸர், ஃபோர் மூலமாக நம்பிக்கை கொடுக்க ரவிந்திர ஜடேஜா அவருக்கு பக்கபலமாக நின்றார். ஆனால் ஜடேஜா 3 ரன்களில் செல்ல தோனி என்ட்ரி கொடுத்தார். வந்த வேகத்தில் 2 பந்துகளையும் வானத்தில் பறக்கவிட்டார். 3வது பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று அது ரவி பிஷ்னோய் கைக்குள் ஐக்கியமானதால் தோனி பெவிலியன் பக்கம் திரும்பிச் சென்றார். இந்தப்போட்டியில் 12 ரன்களை எடுத்ததன் மூலம் தோனி ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை கடந்துள்ளார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களை குவித்தது. அம்பதி ராயுடு 27 ரன்களுடனும், மிட்ஷெல் சாட்னர் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். லக்னோ அணி தரப்பில் ரவி பிஷ்னோய், மார்க் உட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும்,ஆவேஷ் குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE