IPL | ரெய்னா இல்லாமல் முதல் முறையாக சேப்பாக்கத்தில் விளையாடும் சிஎஸ்கே!

By செய்திப்பிரிவு

சென்னை: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாமல் ஐபிஎல் அரங்கில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று விளையாட உள்ளது. அதேபோல சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சேப்பாக்கத்தில் இதுவே முதல் போட்டி.

கடந்த 2008 முதல் சேப்பாக்கம் மைதானத்தில் 56 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி உள்ளது. அந்த 56 போட்டிகளிலும் ரெய்னா விளையாடி உள்ளார். அதாவது, 2008 முதல் 2019 வரை. இரண்டு ஆண்டு தடை காலம் இதில் சேராது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் அன்போடு ‘தளபதி’ என அழைக்கப்படுபவர் ரெய்னா. பேட்டிங், பீல்டிங், பார்ட் டைம் பவுலிங் என அசத்துவார். 55 இன்னிங்ஸ் விளையாடி உள்ள அவர் மொத்தம் 1,498 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 8 அரைசதங்கள் மற்றும் 1 சதம் அடங்கும். 26 கேட்ச்கள் பிடித்துள்ளார். மொத்தம் 39.2 ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். தோனியின் படைத் தளபதியாக சேப்பாக்கத்தில் கலக்கியவர். கடந்த 2021 வரை ரெய்னா, சென்னை அணிக்காக விளையாடி உள்ளார். சென்னை அணிக்காக மொத்தம் 176 போட்டிகளில் விளையாடி 4,687 ரன்கள் எடுத்துள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட்: கடந்த 2020 முதல் சென்னை அணிக்காக ருதுராஜ் விளையாடி வருகிறார். இதுவரை 37 இன்னிங்ஸ் விளையாடி மொத்தம் 1,299 ரன்கள் எடுத்துள்ளார். 11 அரைசதம் மற்றும் 1 சதம் இதில் அடங்கும். கடந்த 2019-க்கு பிறகு சென்னை அணி கரோனா பரவல் காரணமாக சேப்பாக்கத்தில் விளையாடவில்லை. இந்தச் சூழலில் அவர் இன்றைய போட்டியில் சேப்பாக்கத்தில் முதல் முறையாக களம் காண உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE