பட்லர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் அதிரடியில் ராஜஸ்தான் அபார வெற்றி: 72 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அந்த அணி சார்பில் பேட்டிங்கில் ஜாஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோர் அரை சதம் விளாசினர்.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்கள்குவித்தது. தொடக்க வீரரான ஜாஸ்பட்லர் 22 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசிய நிலையில் ஃபசல்ஹக்பரூக்கி பந்தில் போல்டானார்.அவர், 20பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்திருந்தார். பட்லரின் அதிரடியால் ராஜஸ்தான் அணி பவர்பிளேவில் 85 ரன்கள் விளாசியது.

மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்விஜெய்ஸ்வால் 37 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 54 ரன்களும், கேப்டன் சஞ்சு சாம்சன் 32பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 55 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். தேவ் தத் படிக்கல் 2, ரியான் பராக் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சிம்ரன் ஹெட்மயர் 22, ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் பரூக்கி, நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

204 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஹைதராபாத் முதல் ஓவரிலேயே ஆட்டம் கண்டது. அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் டிரெண்ட் போல்ட் பந்தில் நடைடைய கட்டினர். அறிமுக வீரராக களமிறங்கிய இங்கிலாந்தின் ஹாரி புரூக்13 ரன்களில் யுவேந்திர சாஹல் பந்தில் போல்டானார். வாஷிங்டன் சுந்தர் 1, கிளென் பிலிப்ஸ்8 ரன்களில் வெளியேறினர். 48 ரன்களுக்கு5 விக்கெட்களை பறிகொடுத்த ஹைதராபாத் அணி அதன் பின்னர் மீள முடியாமல் போனது.

சற்று போராடிய மயங்க் அகர்வால் 27 ரன்களில் யுவேந்திர சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். ஆதில் ரஷித் 18, கேப்டன் புவனேஷ்வர் குமார்6 ரன்களுக்கு வெளியேறினர்.

அப்துல் சமத் (32), உம்ரன் மாலிக் (19) அதிரடியாக விளையாடியதால் அந்த அணியால் 100 ரன்களை கடக்க முடிந்தது. முடிவில் 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் யுவேந்திர சாஹல் 4 விக்கெட்களையும், டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஜாஸ் பட்லர் தேர்வானார்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தானின் ஜாஸ் பட்லர், பவர்பிளேவுக்குள்ளேயே அரை சதம் அடித்தார். பவர் பிளேவில் அவர், அரை சதம் அடிப்பது இது 3-வது முறையாகும். இந்த வகை சாதனையில் டேவிட் வார்னர் 6 முறை அரை சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் (54), ஜாஸ் பட்லர் (54), சஞ்சு சாம்சன் (55) ஆகியோர் அரை சதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் அரை சதம் அடிப்பது இது 4-வது முறையாகும்.

பவர்பிளேவில் அதிகம்..: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவர்பிளேவில் ராஜஸ்தான் அணி 85 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் அந்த அணி பவர்பிளேவில் குவித்த அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது. இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டு அபுதாபியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 81 ரன்கள் சேர்த்திருந்தது ராஜஸ்தான் அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE