இம்பாக்டே இல்லாத வீரர் ‘இம்பாக்ட் பிளேயரா?’- தோனி கேப்டன்சியைத் தாக்கும் சேவாக், திவாரி

By ஆர்.முத்துக்குமார்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் முதல் போட்டியில் சிஎஸ்கே அணி தோற்றதற்கு தோனியின் தவறான கேப்டன்சிதான் காரணம் என்று விரேந்திர சேவாக் விமர்சனம் செய்துள்ளார்.

முதலில் மிடில் ஓவர்களில் ரன்களை குவிக்க முடியாமல் திணறியதால் ருதுராஜ் இன்னிங்ஸிற்குப் பிறகே சுணங்கிப் போய் 178 ரன்களையே எடுத்தது சிஎஸ்கே. அந்தப் பிட்சில் 178 என்பது சரிசம ஸ்கோர் அல்ல. 10-20 ரன்கள் குறைவான ஸ்கோரே. அதன் பிறகு தோனியின் கேப்டன்சி, அவரது பழைய சாமர்த்தியம், புத்திசாலித்தனங்கள் இல்லாமல் சொதப்பலாக அமைந்தது.

தோனியின் கேப்டன்சி எப்போதும் ஸ்பின் பவுலர்களைக் கையாள்வதில் சோடை போனதில்லை. ஆனால், வேகப்பந்து வீச்சின் விசிறி அல்ல தோனி. ஏனெனில் அவர் விக்கெட் கீப்பிங்கெல்லாம் அலுங்காமல் குலுங்காமல் செய்ய விரும்புபவர். அவர் டைவ் அடித்து கேட்ச் பிடிக்க முயற்சி செய்யமாட்டார். ஏனெனில் காயம் அவரை எப்போதும் அச்சுறுத்தும் விஷயம். ஆனால், அவர் அதிகம் காயமடையாமல் ஆடியதற்கு விக்கெட் கீப்பிங்கையும் அவர் மேலாண்மை செய்ய முடிந்ததே. அதற்காக வேகப்பந்து, அதிவேகப்பந்து வீச்சாளர்களை அவர் அதிகம் ஊக்குவிக்க மாட்டார்.

அப்படிப்பட்ட தோனி அன்று ஆஃப் ஸ்பின்னர்களை, டீசண்டாக வீசும் மொயின் அலியை பயன்படுத்தாமல் விட்டது பெரிய விமர்சனப் புள்ளியாக எழுந்துள்ளது. அன்று அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக இம்பாக்ட் பிளேயராக பவுலர் துஷார் தேஷ்பாண்டே இறக்கப்பட்டார். ஆனால், இம்பாக்டே ஏற்படுத்தாத இம்பாக்ட் பிளேயராக தேஷ்பாண்டே முடிந்தார். 3.2 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்தார்.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் வாய்ப்புக் கிடைக்கப் பெறாத சேவாக் மிகத்துல்லியமாக தோனியின் கேப்டன்சி குறைபாடுகளைப் புட்டுப் புட்டு வைத்துள்ளார். கிரிக்பஸ் இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.

“மிடில் ஓவரில் எங்காவது ஒரு ஓவர் மொயின் அலியை தோனி பயன்படுத்தியிருந்தால் தேஷ்பாண்டேயை நம்பி அவர் இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தேஷ்பாண்டே அதிக ரன்களை வாரி வழங்கினார். தோனி இப்படிப்பட்ட தவறுகளை அடிக்கடி செய்பவர் அல்ல. இங்குதான் ரிஸ்க் எடுத்து பலனை எதிர் நோக்கும் கேப்டன்சி தேவை. வலது கை பேட்டர் என்றால் ஆஃப் ஸ்பின்னர் போடக்கூடாது என்று இருக்கின்றதா என்ன? ஒரு ஓவர் கொடுத்துப் பார்த்திருக்கலாம்” என்றார் சேவாக்.

இன்னொரு முன்னாள் இந்திய வீரரான மனோஜ் திவாரி கூறும்போது, “துஷார் தேஷ்பாண்டேயிடம் புதிய பந்தை கொடுத்தது உண்மையில் ஆச்சரியமாகவே இருந்தது. உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் எப்போது வீசுகிறார் என்று தோனிக்குத் தெரியவில்லை. துஷார் எப்போதும் புதிய பந்தில் வீசுபவர் அல்ல. பின்னால்தான் அவர் வீசுவார். ராஜ்யவர்தன் ஹங்கர்கேகரிடம் புதிய பந்தை கொடுத்திருக்கலாம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE