கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம்: 'விதியால்' 7 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி

By செய்திப்பிரிவு

ஐபிஎல் டி 20 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

மொகாலியில் உள்ள பிசிஏ-ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் முதல் 2 ஓவர்களை முழுமையாக எதிர்கொண்டு 12 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் விளாசிய நிலையில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய பனுகா ராஜபக்ச மட்டையை சுழற்றினார்.

இதனால் பஞ்சாப் அணி 10 ஓவர்களிலேயே 100 ரன்களை எட்டியது. சிறப்பாக விளையாடி வந்த பனுகா ராஜபக்ச 32 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசிய நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஷிகர் தவணுடன் இணைந்து 9 ஓவர்களில் 86 ரன்கள் சேர்த்தார் பனுகா ராஜபக்ச. இதைத் தொடர்ந்து ஜிதேஷ் சர்மா 11 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 21 ரன்கள் விளாசி டிம் சவுதி பந்தில் வெளியேறினார்.

நிதானமாக பேட் செய்த ஷிகர் தவண் 39 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தில் போல்டானார். அவரைத் தொடர்ந்து சிகந்தர் ராசா 13 பந்தில் 16 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரேன் பந்தில் ஆட்டமிழந்தார். சாம் கரண் 17 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 26 ரன்களும், ஷாருக்கான் 7 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா அணி சார்பில் டிம் சவுதி 4 ஓவர்களை வீசி 54 ரன்களை தாரைவார்த்து 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

192 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கொல்கத்தா அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது. அர்ஷ்தீப் சிங் பந்து விச்சில் மன்தீப் சிங் (2), அனுகுல் ராய் (4) ஆட்டமிழந்தனர். ரஹ்மனுல்லா குர்பாஷ் 22 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் எலிஸ் பந்தில் போல்டானார்.4.2 ஓவர்களில் 29 ரன்களுக்கு 3 விக்கெட்களைஇழந்த நிலையில் வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயர் விதியின் கீழ் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், கேப்டன் நிதிஷ் ராணாவுடன் இணைந்து போராடினார். நிதிஷ்ராணா 17 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில் சிகந்தர் ராசா பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் 4 ரன்னில் ராகுல் சஹார் பந்தில் நடையை கட்டினார்.10.1 ஓவரில் 80 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய ஆந்த்ரே ரஸ்ஸல் மட்டையை சுழற்றினார். இதனால் கொல்கத்தா அணியின் நம்பிக்கை அதிகரித்தது. ரஸ்ஸல் 19 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் சேம் கரண் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. ஷர்துல் தாக்குர் 8, சுனில் நரேன் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 46 ரன்கள் தேவையாக இருந்தன. அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் வெற்றியை தீர்மானிக்க டக்வொர்த் லீவிஸ் விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பஞ்சாப் கிங்ஸ்அணி 7 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்ட நாயகனாக அர்ஷ்தீப் சிங் தேர்வானார். அவர்,3 ஓவர்களை வீசி19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்