IPL 2023 | ‘என்றென்றும் தோனி’ என குரல் கொடுக்கும் ரசிகர்கள்: உருக வைக்கும் ப்ரோமோ வீடியோ!

By செய்திப்பிரிவு

சென்னை: 16-வது ஐபிஎல் சீசனின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், போட்டிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்த 45 நொடிகள் கொண்ட ப்ரோமோ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. இந்த விளம்பரம் காண்போரை உருக செய்யும் வகையில் உள்ளது.

இந்த சீசன் தோனியின் கடைசி சீசனாக இருக்கலாம் என ஊகங்கள் ஒருபக்கம் உலாவிக் கொண்டிருக்க, அதை மையப்படுத்தியே இந்த ப்ரோமோ உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ரசிகர்கள் தோனி குறித்து சிலிர்ப்பூட்டும் வகையில் பேசுகிறார்கள்.

நெறியாளர் ஒருவர் மைக்கும் கையுமாக ரசிகர்கள் இருக்கும் கேலரிக்கு செல்கிறார். மக்கள் மனதில் மில்லியன் கணக்கில் எதிரொலிக்கும் தோனியின் பெயர் என சொல்லி ரசிகர்களை நோக்கி மைக்கை நீட்டுகிறார். ‘முடியாததை முடிப்பவர்’, ‘தோனி சார் எங்கள விட்டு போகாதீங்க சார்’, ‘தல விளையாடுறது பாத்தப்போ சத்தத்த என்னால் உணர முடியுது’ என சொல்லும் செவித்திறன் குன்றிய மழலை என இந்த ப்ரோமோ நீள்கிறது. இறுதியில் ‘#FOREVER7’ என நிறைவு பெறுகிறது.

கடந்த 2008 முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். தனது கடைசி டி20 போட்டி நிச்சயம் சென்னையில் தான் இருக்கும் என தோனி சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE