ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்: குஜராத் டைட்டன்ஸ் - சிஎஸ்கே பலப்பரீட்சை!

By பெ.மாரிமுத்து

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. வரும் மே 28-ம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், 4 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், இரு முறை சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், தலா ஒரு முறைபட்டம் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், கடந்த ஆண்டு அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய 10 அணிகள் களமிறங்குகின்றன. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

பிளே ஆஃப் சுற்றில் முதல் தகுதி சுற்று ஆட்டம், எலிமினேட்டர், 2வது தகுதி சுற்று ஆட்டம் என 3 ஆட்டங்கள் நடைபெறும். முதல் தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். மாறாக அந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி 2வது தகுதி சுற்று ஆட்டத்தில் கலந்து கொள்ளும். இதில் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணியுடன் பலப்பரீட்சை நடத்தும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் கால்பதிக்கும். சாம்பியன் பட்டம் யாருக்கு?என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டிமே 28ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் நடைபெறும் தேதி, இடங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இம்முறை 4 வருடங்களுக்குப் பிறகு உள்ளூர் மைதானம், வெளிமாநில மைதானம் என்ற அடிப்படையில் அணிகள் மோத உள்ளன. இந்த வகையில் ஒவ்வொரு அணியும் தனது சொந்த மைதானத்தில் 7 ஆட்டங்களையும், வெளிமாநிலங்களில் 7 ஆட்டங்களையும் விளையாடும். தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்,டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ்ஆகிய அணிகள் ‘பி’ பிரிவிலும் உள்ளன. ஒரு குழுவில் உள்ள அணி எதிர் குழுவில்உள்ள அணிகளுக்கு எதிராக தலா இரு முறை மோதும். அதேவேளையில் தனது பிரிவில்அணிகளுடன் தலா ஒரு முறை பலப்பரீட்சைநடத்தும். இந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஹைதராபாத், குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்கு எதிராகதலா ஒரு முறை மட்டுமே லீக் சுற்றில் மோதும்.தொடக்க நாளான இன்று இரவு 7.30 நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் கடந்த ஆண்டுதான் ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனது. ஹர்திக் பாண்டியாவின் தலைமைப்பண்பு, அழுத்தம் இல்லாமல் விளையாடிய இளம்வீரர்கள், அனுபவம் வாய்ந்த டேவிட் மில்லரின் அதிரடி ஆகியவற்றால் அறிமுக தொடரிலேய பட்டம் வென்று அசத்தியது குஜராத்அணி. இம்முறையும் அந்த அணி கோப்பையை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாகவே இருக்கிறது. சிஎஸ்கே, மும்பை ஆகியஅணிகளின் வரிசையில் குஜராத் அணியும் ஆதிக்கம் செலுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) கடந்த ஆண்டில் கேப்டன்ஷிப் பிரச்சினையில் சிக்கி தவித்ததால் 9-வதுஇடத்துடன் தொடரை நிறைவுசெய்தது. இந்த முறை தோனிதலைமையில் முழு உத்வேகத்துடன் சிஎஸ்கே களமிறங்குகிறது. ஐபிஎல் தொடரில் தோனிவிளையாடும் கடைசி சீசனாக இதுஇருக்கக்கூடும் என்பதால் அந்த அணி வீரர்கள் உணர்வுப்பூர்வமாக செயல்படக்கூடும். உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், மொயின்அலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இருப்பது பலமாக பார்க்கப்படுகிறது.

வலைப்பயிற்சில் சிறப்பாக செயல்பட்டுள்ள தோனி, மீண்டும் சிஎஸ்கேயின் மிகப்பெரிய பலமாக இருப்பார்.எப்போதுமே சிஎஸ்கே அணி விமர்சனங்களை தகர்த்து திறமையை நிரூபித்துள்ளது. அந்த வகையில்இந்த சீசனை சாம்பியனாக முடிப்பதற்கும், தங்களது கேப்டனுக்கு மறக்க முடியாதபிரியாவிடை வழங்குவதற்கும் சிஎஸ்கே வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் செயல்படக்கூடும்.

இந்த போட்டிக்கு முன்னதாக பிரம்மாண்டாக தொடக்க விழா 6 மணி அளவில் நடைபெறுகிறது. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, தமன்னா பாட்டியா ஆகியோரது நடன நிகழ்ச்சியும், பாடகர் அர்ஜித் சிங் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

குஜராத் டைட்டன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சுப்மன் கில், டேவிட் மில்லர், கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், கே.எஸ்.பரத், அல்ஸாரி ஜோசப், ஜோஷ் லிட்டில், ராகுல் தெவாட்டியா, முகமது ஷமி, தர்ஷன் நீலகண்டே, நூர் அகமது, உர்வில் படேல், ரஷித் கான், ரித்திமான் சாஹா, சாய் கிஷோர், சாய் சுதர்சன், பிரதீப் சங்க்வான், விஜய் சங்கர், மொஹித் சர்மா, ஷிவம் மாவி, ஒடியன் ஸ்மித், மேத்யூ வேட், ஜெயந்த் யாதவ், யாஷ தயாள்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ்.தோனி (கேப்டன்), மொயின் அலி, பகத் வர்மா, தீபக் சாஹர், டேவன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, சிசன்டா மகலா, அஜஸ் மண்டல், மதீஷா பதிரணா, டுவைன் பிரிட்டோரியஸ், அஜிங்க்ய ரஹானே, ஷேக் ரஷீத், அம்பதி ராயுடு, மிட்செல் சாண்ட்னர், சுப்ரான்சு சேனாபதி, சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரஷாந்த் சோலங்கி, பென்ஸ்டோக்ஸ், மகேஷ் தீக் ஷனா.

பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே? கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை, குஜராத் அணிகள் இருமுறை நேருக்கு நேர் மோதி இருந்தன. இந்த இரண்டு ஆட்டங்களிலும் குஜராத் அணி வெற்றிகண்டிருந்தது. இந்த தோல்விகளுக்கு இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக் கூடும்.

இவர்கள் இல்லை… காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் 16-வது சீசனில் ரிஷப் பந்த் (டெல்லி), ஜஸ்பிரீத் பும்ரா (மும்பை), ஸ்ரேயஸ் ஐயர் (கொல்கத்தா), ஜானி பேர்ஸ்டோ (பஞ்சாப்), முகேஷ் சவுத்ரி (சிஎஸ்கே) ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

முகேஷ் விலகல்: சிஎஸ்கே அணியில் கடந்த ஆண்டு இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி 16 விக்கெட்களை வீழ்த்தி கவனத்தை ஈர்த்திருந்தார். 16-வது சீசன் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில் முதுகுவலி காயம் காரணமாக தொடரில் இருந்து அவர், விலகியுள்ளார்.

12 நகரங்கள்… ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் போட்டிகள் அகமதாபாத், மொகாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவாஹாட்டி, தரம்சாலா ஆகிய 12 நகரங்களில் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்