இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு மாநிலங்களவையில் பாராட்டு!

By செய்திப்பிரிவு

டெல்லி: இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதன் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பாராட்டுகளை தெரிவித்தார்.

“மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, இந்தத் தருணம் நம் அனைவருக்கும் பெருமைமிகு தருணமாகும். ஏனெனில் நமது மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகள் புதுதில்லியில் மார்ச் 15ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளனர். இந்த சாதனையைப் படைத்த நீது, நிகத் ஜரீன், லோவ்லினா, சாவிட்டி ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இந்த வீராங்கனைகளின் சாதனைகள் இந்தியாவை உலக அரங்கில் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வதுடன், இளம் வீராங்கனைகளுக்கு உந்து சக்தியாகத் திகழும். இந்த சாதனை அவர்களது கடின உழைப்பு, விடாமுயற்சி, தீரம், மற்றும் தனித்திறமைகளுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும். பெண்சக்தி மறுமலர்ச்சிக்கான சகாப்தம் தொடங்கியிருப்பதை இந்த வீராங்கனைகளின் சாதனை நிரூபித்திருக்கிறது.

குத்துச்சண்டை வீராங்கனைகளின் சாதனை விளையாட்டுத் துறையில் நமது வீராங்கனைகளின் சிறப்பான பங்களிப்பை பிரதிபலிக்கிறது. இந்த அவையின் சார்பில் மகிழ்ச்சியை நாட்டு மக்கள் அனைவருக்கும் பகிர்கிறோம். நம்முடைய குத்துச்சண்டை வீராங்கனைகள் எதிர்வரும் போட்டிகளில் சாதிக்க வாழ்த்து தெரிவிக்கிறோம். மேலும் அவர்களது பயிற்சியாளர்களுக்கும் ஊக்கமளிக்கும் விளையாட்டுத் துறை ஊழியர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE