உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - சிறந்த அணியாக இந்தியா தேர்வு

By செய்திப்பிரிவு

மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் கடைசி நாளில் இறுதிச் சுற்றின்முதல் போட்டி நிகத் ஜரீனுக்கும் வியட்னாம் வீராங்கனை நிகுயென் தீ தம் என்பவருக்குமிடையே நடைபெற்றது.

முதல் சுற்றில் தொடக்கத்தில் பல நொடிகளுக்கு தன் எதிரியின் உத்திகளை அறிந்து கொள்வதற்காகவே நிகத் செலவிட்டது போல் இருந்தது. முதல் சுற்றில் நிகத்துக்கு ஆதரவாக 5-0 என்ற கணக்கில் முடிவானது என்றாலும் இரண்டாவது சுற்றில் 2-3 என்று முடிவு அவருக்கு எதிராகப் போனது. எனவே மூன்றாவது சுற்று பரபரப்பானது. அதில் சிறப்பாக செயல்பட்ட நிகத் ஜரீன் இறுதியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

54 கிலோ எடை பிரிவில் தைபேவைச் சேர்ந்த (அதாவது தைவான்) ஹுவாங் வென், கொலம்பியாவைச் சேர்ந்த ஏரியஸ் மார்செல்லாவுடன் மோதினார். கொலம்பிய வீராங்கனை தனது எதிரியின்கழுத்தளவு உயரம் கொண்டவராகத்தான் இருந்தார்.

எனவே தைபே வீராங்கனையால் பல குத்துக்களை எதிராளியின் மீது இறக்க முடிந்தது. அதே நேரம் கொலம்பிய வீராங்கனை பிரபல டென்னிஸ் வீராங்கனை மோனிகா செலஸை ஒருவிதத்தில் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு குத்து முயற்சிக்கும் அவர் தொண்டையில் இருந்து ஒரு கத்தல் ஒலி வந்து கொண்டே இருந்தது. நீதிபதிகளின் ஒருமித்த தீர்ப்பு தைபே வீராங்கனைக்கு ஆதரவாகக் கிடைத்தது. நடுவர் அவரது கையை தூக்கியபோது மூன்று முறை அவர் முழுமையாக குதித்தது வேடிக்கை.

60 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் மோதிக்கொண்ட இருவருமே தென் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பிரேசிலைச் சேர்ந்த ஃபெராரியா பீட்ரீஸ். மற்றவர் கொலம்பியாவைச் சேர்ந்த வால்டேஸ் பாலோ. இறுதியில் வெற்றி என்று அறிவிக்கப்பட்டதும் பிரேசில் வீராங்கனை நடனமாடியது கேளிக்கையாக இருந்தது. 75 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை லோவ்லினா ஆஸ்திரேலிய வீராங்கனை பார்க்கர் அனேவோடு மோதினார்.

இதில் முதல் சுற்றில் 3-2 என்ற கணக்கில் முன்னணி பெற்ற லோவ்லினா இரண்டாவது சுற்றில் 1-4 என்ற கணக்கில் பின் தங்கினார். மூன்றாவது சுற்றும் முடிந்ததும் பவுட் ரிவியூ முறை என்று அறிவிப்பு வர வெற்றியாளர் லோவ்லினா என்பது நிச்சயமாகும் வரை அரங்கில் அசாத்திய அமைதி.

போட்டிகள் முடிவடைந்ததும் நான்கு தங்கப்பதக்கம் பெற்ற இந்திய அணி சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இந்திய வீராங்கனையாக நிகத் ஜரீன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE