IPL 2023 | சேப்பாக்கத்தில் சுழன்றடிக்குமா சிஎஸ்கே?

By பெ.மாரிமுத்து

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் போட்டிகள் வரும் 31ம் தேதி தொடங்குகின்றன. தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. 4 முறை சாம்பியனான சிஎஸ்கே-வுக்கு 2022-ம் சீசன் மோசமானதாக அமைந்தது. 10 அணிகள் கலந்து கொண்ட அந்தத் தொடரில் சிஎஸ்கே அணியால் 8 புள்ளிகளுடன் 9-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

ரவீந்திர ஜடேஜா கேப்டனாக சீசனை தொடங்கிய நிலையில் அழுத்தம் மற்றும் தனது மோசமான பார்ம் காரணமாக தொடரின் மத்தியில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனால் தோனி மீண்டும் கேப்டனாக மாறினாலும் பிற்பாதியில் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த சீசனில் சிஎஸ்கே தோனி தலைமையில் முழு பலத்துடன் களமிறங்குகிறது. தொடக்க பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே அசத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களை தொடர்ந்து பெரும் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் பலம் சேர்க்கக்கூடும். அவருக்கு 4-வது இடத்தில் களமிறங்கும் அம்பதி ராயுடு உறுதுணையாக இருக்கக்கூடும். நடுவரிசையில் ஆல்ரவுண்டர்களாக ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா வலுவாக உள்ளனர். 41 வயதான தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கக்கூடும் என்பதால் 5-வது முறை மகுடம் சூடுவதில் தீவிரம் காட்டக்கூடும்.

பந்து வீச்சில் தீபக் சாஹர் அணிக்கு திரும்பி இருப்பது வலு சேர்த்துள்ளது. தொடக்க ஓவர்களில் அவரது ஸ்விங் பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மகேஷ் தீக்ஷனா, சிசன்டா மகலா, முகேஷ் சவுத்ரி, மிட்செல் சாண்ட்னர் உள்ளிட்டோரும் பந்து வீச்சில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.

தாமதமாகும் வீரர்கள்…: இலங்கையைச் சேர்ந்த மகேஷ் தீக்ஷனா, மதீஷா பதிரணா ஆகியோர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கலந்துகொண்டுள்ளதால் சிஎஸ்கே அணியுடன் இன்னும் இணையவில்லை. நியூஸிலாந்துக்கு எதிரான தொடர் ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது. இதனால் இவர்கள் இருவரும் சிஎஸ்கேவின் முதல் 3 ஆட்டங்களில் இடம் பெற மாட்டார்கள்.

இதேபோன்று காயம் அடைந்த கைல் ஜேமிசனுக்கு மாற்றாக சேர்க்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவின் சிசன்டா மகலாவின் வருகையும் தாமதம் ஆகும் என தெரிகிறது. கடந்த சீசனில் சற்று தாக்கத்தை ஏற்படுத்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரிக்கு, முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சைக்காக அவர், தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி உள்ளார். இதனால் அவரும், சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டங்களில் பங்கேற்பது சந்தேகம்தான்.

இது ஒருபுறம் இருக்க தொடரின் இறுதிப் பகுதியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது.

சிஎஸ்கே அணியின் டாப் 7 பேட்ஸ்மேன்களில் 5 பேர் இடது கை வீரர்களாக உள்ளனர். இது எதிரணியின் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக விஷயமாக பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே தனது முதல் 8 போட்டிகளில் 5 ஆட்டங்களை வெளி மாநிலங்களில் விளையாடுகிறது. இதனால் தொடக்கத்திலேயே கணிசமான வெற்றிகளை பெறுவதில் முனைப்புக்காட்டக்கூடும்.

காயங்கள் போச்சு…: தொடக்க பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட், முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் ஆகியோர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். இதில் தீபக் சாஹர் கடந்த சீசனில் முழுவதும் விளையாட முடியாமல் போனது அந்த அணியின் பந்து வீச்சு திட்டங்களில் பெரிய அளவில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

ராபின் உத்தப்பா ஓய்வு பெற்றுவிட்டதால் அவரது இடத்தில் ஷிவம் துபே அல்லது அஜிங்க்ய ரஹானே களமிறங்கக்கூடும். காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ஷிவம் துபே கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் முதல் எந்தவித போட்டிகளிலும் விளையாடவில்லை. அனுபவ வீரரான அஜிங்க்ய ரஹானேவின் ஸ்டிரைக் ரேட் 119. இதனால் அவரிடம் இருந்து பெரிய அளவிலான அதிரடி ஆட்டம் வெளிப்படுமா என்பது சந்தேகம்.

இறுதிகட்ட பந்து வீச்சு?: இலங்கையின் தீக் ஷனா, தென் ஆப்பிரிக்காவின் சிசன்டா மகலா ஆகியோர் தங்களது தேசிய அணிக்கான போட்டிகளில் இறுதிக்கட்ட ஓவர்களை சிறப்பாக வீசக்கூடியவர்களாக திகழ்கின்றனர். இவர்கள் சிஎஸ்கே அணியுடன் தாமதமாகவே இணைவதால் தொடக்க ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை உள்ளது. இதனால் இறுதிக்கட்ட ஓவர்களை வீசவதற்கு மாற்று வீரர்களை சிஎஸ்கே தயார் படுத்தக்கூடும். முழங்கால் காயம், ஆஷஸ் தொடர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் முழுமையாக பயன்படுத்தப்படுவாரா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

இந்த வருடம் என்ன புதிது?: இந்த சீசனில் புதிதாக, இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சிஎஸ்கே ஏலம் எடுத்துள்ளது. ஹரியாணாவின் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் நிஷாந்த் சிந்து மற்றும் சத்தீஸ்கர் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அஜய் மண்டல் ஆகியோர் ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்று வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று பேட்டிங்கில் அஜிங்க்ய ரஹானே, யு-19 கோப்யையை வென்ற முன்னாள் கேப்டன் ஷேக் ரஷீத் ஆகியோர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.

சிஎஸ்கே அணி 2019-ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மைதானமான சேப்பாக்கத்துக்கு முழுமையாக திரும்புகிறது. ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தவாறு மாய சுழல், ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், இடது கை விரல் ஸ்பின் என சுழற்பந்து வீச்சில் உள்ள அனைத்து வகைகளையும் கையாளக்கூடிய வீரர்களை கொண்டுள்ளது சிஎஸ்கே. சேப்பாக்கத்தில் சுழற்பந்து வீச்சு பார்முலாவை கொண்டு எப்படி வெற்றி காண்பது என்பது குறித்து அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங் திட்டங்கள் வகுத்திருக்கக்கூடும்.

அதேவேளையில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக மட்டை வீச்சில் தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் திறன் கொண்ட ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, மொயின் அலி ஆகியோர் அணியில் இருப்பது சாதகமான விஷயம். சிஎஸ்கே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஆழமான வரிசையை கொண்டுள்ளது. இது தோனிக்கு சவுகரியமாக இருக்கக்கூடும்.

சிஎஸ்கே படை: எம்.எஸ்.தோனி (கேப்டன்), மொயின் அலி, பகத் வர்மா, தீபக் சாஹர், டேவன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, சிசன்டா மகலா, அஜஸ் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரணா, டுவைன் பிரிட்டோரியஸ், அஜிங்க்ய ரஹானே, ஷேக் ரஷீத், அம்பதி ராயுடு, மிட்செல் சாண்ட்னர், சுப்ரான்சு சேனாபதி, சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரஷாந்த் சோலங்கி, பென் ஸ்டோக்ஸ், மகேஷ் தீக் ஷனா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்