IPL 2023 ரவுண்ட்-அப் | கொல்கத்தாவின் கேப்டன் ஆன நித்திஷ் ராணா; ஹைதராபாத் உடன் இணைந்த புவி!
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட்டின் 16-வது சீசன் வரும் 31-ம் தேதி துவங்க உள்ள நிலையில் பல்வேறு அணிகளில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. காயம் காரணமாக முக்கிய வீரர்கள் ஐபிஎல் சீசனை மிஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதனால் அவர்களுக்கு மாற்று வீரர்களை அணிகள் அறிவித்து வருகின்றன. அதே நேரத்தில் சீசன் தொடங்குவதை முன்னிட்டு தங்கள் அணிகளுடன் வீரர்களும் இணைந்து வருகின்றனர்.
- முதுகு வலி காரணமாக சிகிச்சை பெற்று வரும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக அணியை நித்திஷ் ராணா வழிநடத்துவார் என கொல்கத்தா நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக, சுனில் நரைன் மற்றும் ஷர்துல் தாக்கூர் போன்ற வீரர்களின் பெயர்களும் கேப்டன் பொறுப்புக்கு பரிசீலனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
- அதே நேரத்தில் ஸ்ரேயஸ் ஐயர், ஐபிஎல் 2023 சீசனில் சில போட்டிகளிலாவது விளையாடுவார் என கொல்கத்தா அணி நிர்வாகம் நம்புவதாக தகவல்.
- இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், தனது ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இணைந்துள்ளார்.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ள ரஜத் பட்டிதர் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் காயமடைந்துள்ள பிரசித் கிருஷ்ணாவுக்கு மாற்றாக ஸ்விங் பவுலர் சந்தீப் சர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
- வரும் 30-ம் தேதி 10 ஐபிஎல் அணிகளின் கேப்டன்களும் அகமதாபாத் நகரில் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் மேற்கொள்ளும் பயிற்சியை காண ரசிகர்களுக்கு இன்று (மார்ச் 27) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.