WPL 2023 | நாட் ஷிவர் பிரன்ட்டின் பொறுப்பான ஆட்டம்: சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ்

By செய்திப்பிரிவு

மும்பை: முதலாவது மகளிர் பிரீமியர் லீக் (WPL) 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பையில் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் கேப்டனும் நட்சத்திர வீராங்கனையான மெக் லேனிங் உடன் ஷெபாலி வர்மா ஓப்பனிங் செய்தார். 4 பந்துகளை சந்தித்த ஷெபாலி தலா ஒரு சிக்ஸ் பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆகி சரிவை தொடங்கி வைத்தார். இதன்பின் வந்தவர்களில் பெரிதாக யாரும் சோபிக்கவில்லை.

ஓரளவுக்கு நிலைத்து ஆடி 35 ரன்கள் சேர்த்திருந்த கேப்டன் மெக் லேனிங்கை மும்பை வீராங்கனைகள் அமன்ஜோத் கவுர் மற்றும் யாஸ்திகா பாட்டியா இணைந்து ரன் அவுட் செய்ய ஆட்டம் மொத்தமாக மும்பை வசம் சென்றது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 131 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் இஸ்ஸி வோங் மற்றும் ஹேலி மேத்யூஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

132 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ஹேலி மேத்யூஸ் மற்றும் யாஸ்திகா பாட்டியா ஓப்பனிங் இணை சரியான தொடக்கம் கொடுக்க தவறினாலும், இந்த சீசனில் அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய நாட் ஷிவர் பிரன்ட் மீண்டும் ஒரு முறை கைகொடுத்தார். 3 ஓவர்களுக்கு 23 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என தடுமாறி இருந்த அந்த அணியை நாட் ஷிவர் பிரன்ட் தனது பொறுப்பான ஆட்டத்தால் மீட்டெட்டுத்தார். அவருக்கு பக்கபலமாக கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் விளையாடினார். அவர் 37 ரன்களுக்கு அவுட் ஆனாலும், கடைசி வர அவுட் ஆகாமல் இருந்த நாட் ஷிவர் பிரன்ட் 60 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற வைத்தார்.

19.3 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 134 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் முதலாவது மகளிர் பிரீமியர் லீக் (WPL) 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE