மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 4வது தங்கம் - நிகத் ஐரீன், லோவ்லினா சாதனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு நான்காவது தங்கம் கிடைத்துள்ளது.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று 48 கிலோ எடைப் பிரிவு இறுதி போட்டியில் 22 வயதான இந்தியாவின் நீது கங்காஸ் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். 81 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் 3 முறை ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவின் சவீட்டி பூரா தங்கப் பதக்கத்தை கைப்பற்றியிருந்தார்.

இப்போது இவர்கள் வரிசையில் மேலும் இருவர் இணைந்துள்ளனர். நிகத் ஜரீன் மற்றும் லோவ்லினா போர்கோஹைன் இருவரும் இந்தியா சார்பில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 50 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் வியட்நாமின் குயென் தி டாமை எதிர்த்து நிகத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

75 கிலோ எடைப் பிரிவில் லோவ்லினா போர்கோஹைன், ஆஸ்திரேலியாவின் கெய்ட்லின் பார்க்கருக்கு எதிரான இறுதிப்போட்டியில் 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தத் தொடரில் இந்தியா 4வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

கடந்த சில வருடங்களாகவே இந்திய குத்துச்சண்டை விளையாட்டில் ரைசிங் ஸ்டார் ஆக இருக்கும் நிகத் ஜரீனுக்கு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இது இரண்டாவது தங்கப் பதக்கம் ஆகும். முன்னதாக, கடந்த ஆண்டும் தங்கம் வென்றிருந்தார். அதேபோல் கடந்த ஆண்டு பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், லோவ்லினா போர்கோஹைனுக்கு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இது முதல் தங்கம் ஆகும். இதனால் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வரலாற்றில் இதுவரை இந்தியா 14 தங்கம் வென்றுள்ளது. இதில் மேரி கோம் மட்டுமே 6 தங்கப் பதக்கங்களை வேட்டையாடி இருந்தார். அவரை தவிர்த்து சரிதா தேவி (2006-ம் ஆண்டு), ஜென்னி (2006), லேகா (2006), நிகத் ஜரீன் (2022) ஆகியோரும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தனர். தற்போது நீது கங்காஸ், சவீட்டி பூரா, லோவ்லினா போர்கோஹைன் மற்றும் நிகத் ஜரீன் ஆகியோர் தங்கம் வென்று அசத்தி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE