மறக்குமா நெஞ்சம் | 2016-ல் இதே நாளில் மின்னல் வேகத்தில் ஸ்டம்புகளை தகர்த்த தோனி!

By செய்திப்பிரிவு

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத வெற்றிகளில் ஒன்றுதான் கடந்த 2016 டி20 உலகக் கோப்பையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டி. அந்தப் போட்டியின் கடைசி பந்தில் மின்னல் வேகத்தில் சூப்பர் பவர் பெற்ற மின்னல் முரளி போல செயல்பட்டு ஸ்டம்புகளை தகர்த்திருப்பார் தோனி. அதன் மூலம் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் அசாத்திய வெற்றியை பெற்றிருக்கும். அந்தப் போட்டி இதே நாளில் கடந்த 2016-ல் நடைபெற்றிருந்தது.

பெங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருக்கும். 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டும். 19 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருக்கும். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

அந்த ஓவரை ஹர்திக் பாண்டியா வீசி இருந்தார். முதல் மூன்று பந்துகளில் முறையே 1, 4, 4 என மொத்தம் 9 ரன்கள் எடுத்திருக்கும். அந்த மூன்று பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்கதேசம் இருக்கும். ஆனாலும், அந்த அணி கடைசி மூன்று பந்துகளில் 3 விக்கெட்டுகளை வரிசையாக இழந்திருக்கும். முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் என மூன்று பேரும் விக்கெட்டை இழந்திருப்பார்கள். இதில் கடைசி பந்தில் அவுட்டான முஸ்தபிசுர் ரஹ்மானை ரன் அவுட் செய்திருப்பார் தோனி.

கடைசி பந்தை அவுட்சைட் தி ஆஃப்பில் ஷார்டாக வீசி இருப்பார் பாண்டியா. அந்தப் பந்தை மிஸ் செய்திருப்பார் ஸ்ட்ரைக்கில் இருந்த ஷுவகதா ஹோம். இருந்தும் மறுமுனையில் இருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் ரன் எடுக்கும் முயற்சியை முன்னெடுத்திருப்பார். அதை கவனித்த விக்கெட் கீப்பரான தோனி, பந்தை பற்றியதும் வேக வேகமாக ஓடி வந்து ஸ்டம்புகளை தகர்த்து ரன் அவுட் செய்திருப்பார். அதன் மூலம் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும்.

தோனி தனது ஸ்மார்ட்டான கிரிக்கெட் மூளையின் மூலம் நொடி நேரத்தில் சிந்தித்து செயல்பட்டதன் பலனாக இந்த மாயத்தை செய்திருப்பார். கடைசி பந்து வீசுவதற்கு முன்னர் வலது கையில் தான் அணிந்திருந்த கையுறையை அகற்றியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிக்கு பிறகு ‘நாங்கள் யார்க்கர் வீசக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தோம்’ என தோனி சொல்லி இருப்பார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE